கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இன்று (ஜனவரி 30) முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தினை திறந்து வைத்தார்.
முதலில் SETC பேருந்துகள் மட்டும் இங்கிருந்து இயக்கப்பட்டன. தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் இன்று முதல் TNSTC பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ”முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.
சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும். பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டிற்கு மாற்றிய புதிதில் சிரமங்கள் இருந்தன. மக்களுக்கு புரிதல் வருகின்றவரை அந்த சிரமங்கள் இருந்தது.
அதேபோல தான் இந்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையமும். இந்த பேருந்து முனையத்தை திட்டமிட்டவர்கள் அதிமுகவினர். அதிமுக ஆட்சியில் திட்டமிட்டது என்பதற்காக நமது முதல்வர் இந்த திட்டத்தை கைவிடவில்லை.
ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கின்ற காரணத்தினால், செயல்படுத்தப்படாமல் இருந்த 7௦% பணிகளை செயல்படுத்தி இன்றைக்கு முழு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு விமான நிலையத்திற்கு இணையான தரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைந்துள்ளது. தாம்பரம், அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கோயம்பேடும், கிளாம்பாக்கமும் ஒரே தூரம் தான்.
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. வேலூர், ஆற்காடு, பெங்களூர் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். சிரமமில்லாமல் மக்கள் பயணம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்றார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகளின் நடைமேடை தொடர்பான முழு விவரம்..#Minnambalam #KilambakkamBusTerminus #Chennai #TNGovt pic.twitter.com/0vG4e0CCnn
— Minnambalam (@Minnambalamnews) January 30, 2024
இதற்கிடையே பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கான பேருந்துகளை அறிந்து கொள்ளும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை எண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மார்க்கமாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அந்த படத்திற்கு பிறகு தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள்”: எஸ்.ஏ.சந்திரசேகர்
மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடக்கம்!