எதிராக தேனி மாவட்டத்தில் 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமானோர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேகமலை வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 29-ந் தேதி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இத்தீர்ப்பின் அடிப்படையில், அப்பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 98 மலை கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டு வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தங்களது வாழ்விடங்களைப் பறிக்கக் கூடாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேகமலை வனப்பகுதியின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, அங்கு அனுமதியின்றி இயங்கி வரும் தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் வணிக ரீதியான கட்டமைப்புகளை உடனுக்குடன் சீல் வைக்கவும், இடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் ஒரு பகுதியாக, வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து மேகமலை மற்றும் ஹைவேஸ் பகுதிகளில் விதிமீறல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குச் சீல் வைத்து, மின் இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கையைக் கண்டித்து 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான மக்கள் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தினர்.
- கடந்த 100 ஆண்டுகளாக வன நிலங்களில் குடியிருந்து விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும், 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க வேண்டும்
- விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்
- நீதிமன்ற உத்தரவிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு தலையிட வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வன உரிமைக் குழுக்கள் (கடமலை-மயிலை) சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் T.கண்ணன் தலைமையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
