மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (ஜனவரி 3௦) தொடங்கி வைத்தார்.
இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சிவசங்கர்,
”கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த 80% பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
வடசென்னையில் உள்ள மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறோம் என தொடர்ந்து எடுத்துரைத்து வந்த நிலையில்,
முதல்வர் அவர்கள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர்(புதுச்சேரி மார்க்கம்) , திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, போளூர், வந்தவாசி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
தினசரி 16௦ பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். மதுரவாயல் டோல் வழியாக மேற்கண்ட பேருந்துகள் இயக்கப்படும்.
வடசென்னை பகுதிகளில் இருப்பவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக தற்போது இங்கிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிரமமில்லாமல் மக்கள் பயணம் செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கடந்த பொங்கலை விட இந்த பொங்கலுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்துள்ளனர். தேவையான அளவிற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதிய பேருந்துகள் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது.
பேருந்துகளும் தேவையான நேரத்தில் இயக்கப்படுகிறது என மக்கள் உணர்ந்திருக்கின்ற காரணத்தினால், அரசு பேருந்துகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் என்றால், இந்தாண்டு இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கின்றனர். மக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தி இருக்கிறது கூடியிருக்கிறது. இது இன்னும் கூடும்,” என்றார்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…