சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எழில் மாறன் என்கிற எஸ்.எழில். SA chandrasekar speech
நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த இந்த படம் 1999 ஜனவரி 29-ஆம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, ‘எழில்-25’ விழாவாகவும், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிப்பில் தற்போது இயக்கி முடித்து இருக்கும் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவாகவும் சென்னையில் நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளில் விஜய் (துள்ளாத மனமும் துள்ளும்), அஜீத்குமார் (ராஜா, பூவெல்லாம் உன் வாசம்), ஜெயம்ரவி (தீபாவளி), விக்ரம் பிரபு (வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்), உதயநிதி ஸ்டாலின் (சரவணன் இருக்க பயமேன்), விமல் (தேசிங்குராஜா) ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய எழில் மொத்தம் 13 படங்களை இதுவரை இயக்கியுள்ளார்.
இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய பார்த்திபன், முதல் பட வாய்ப்பு வழங்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்திரி, தீபாவளி படத்தின் நாயகன் ஜெயம்ரவி, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், சரண், சுசீந்தரன், பேரரசு, இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகிய முன்னணி திரை பிரபலங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
இவர்களில் மூத்த இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் லியோ படத்தை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியது, தாய்மை பற்றி அழுத்தமாகக் கூறியது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாத பொருளாக மாறியுள்ளது.
எஸ். ஏ. சந்திரசேகர் பேசியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரங்களில் நடக்கும் எந்த விழாவிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட கலந்து கொண்டு உடனே கிளம்பி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு கொள்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் எழில் கூப்பிட்டபோது மறுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு படப்பிடிப்பிலிருந்து சீக்கிரமே கிளம்பி வந்தேன்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் இயக்கிய காலகட்டத்திலிருந்து அவருடன் நான் பழகி இருக்கிறேன். வெற்றி பெற்ற சமயத்திலும் இடையில் தோல்விகளைக் கண்ட போதும் மீண்டும் வெற்றியைத் தொட்ட போதும், எப்போதுமே ஒரே மாதிரி பழகும் ஒரு நல்ல இதயம் கொண்டவர். என் மகன் விஜய் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல் கல்.
இது போன்று ஒரு பத்து படங்கள் இருக்கின்றன. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதையை சொல்வதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி என்னிடம் இயக்குநர் எழிலை அனுப்பி வைத்தார். அவர் கதை சொல்லிவிட்டு அங்கே செல்வதற்குள்ளாகவே நான் போன் செய்து “விஜய்யின் தேதிகள் எப்போது வேண்டும்..?’ என்று ஆர்.பி.சவுத்ரியிடம் கேட்டேன்.
நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பா என்கிற எண்ணத்தில் கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண பப்ளிக்கின் மன நிலையில்தான் கதை கேட்பேன். ஒரு சின்சியரான உதவி இயக்குநரின் பார்வையில் சில கேள்விகளை கேட்பேன். அப்படி நான் கேட்ட கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்காக படத்தில் பதில் சொன்னவர் இயக்குநர் எழில்.
இத்தனை வருடங்களாக அவர் இந்த திரையுலகில் இருக்கிறார் என்றால், யார் ஒருவர் தாயை மிகவும் உயர்வாக மதிக்கிறாரோ அவரை கடவுள் உயரத்திற்கு கொண்டு செல்வார். இது என் வாழ்க்கையில் நான் பார்த்தது.
முன்பெல்லாம் இயக்குநர்கள் நல்ல கதை மற்றும் எந்த ஹீரோ நடித்தாலும் ஓடக் கூடிய திரைக்கதைகளை உருவாக்கி விட்டு படம் எடுப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஹீரோ கிடைத்து விட்டால் போதும் என குப்பை கதைகளை படங்களாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு இயக்குநருக்கு போன் போட்டு பேசினேன். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்து விட்டு படத்தின் முதல் பாதி தரமாக உள்ளது. ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இதுதான் உதாரணம் என்றேன். அவர் மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், இரண்டாம் பாதி சரியில்லை என்றும் அந்த மதத்தில் அப்படியொரு மூட நம்பிக்கை இல்லை என பேசத் தொடங்கினேன். சார் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பிறகு போன் பண்றேன் என வச்சுட்டாரு. அதன் பின்னர் போன் பண்ணவில்லை. படம் வெளியாவதற்கு 5 நாள் முன்னாடியே சொல்லிட்டேன். படம் ரிலீஸ் ஆன பின்னர் அனைவரும் விமர்சனங்களில் அதையே சொல்லி கழுவி ஊத்திட்டாங்க. கதையுடன் சிறப்பான திரைக்கதை அமைத்து படம் பண்ணினால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற பக்குவம், தைரியம் இல்லை.
அதேபோல விஜய்க்காக என்னிடம் ஒரு கதையைச் சொன்னதும் அந்த இயக்குநரை எழுந்து நின்று கட்டிப் பிடித்தேன் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். ஆனாலும் துப்பாக்கி கதையைக் கேட்ட பிறகு ஒரு உதவி இயக்குநராக அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர் என்னுடைய கேள்விக்கு படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது.
எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை ‘துள்ளாத மனமும் துள்ளும்’ கதை சொன்ன சமயத்தில் கேட்டபோது, அந்த படத்தில் அதற்கான பதிலை சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது விஜய் என்ன பெரிய சூப்பர் ஸ்டாரா? இல்லையே?. அந்த கதை அவரை தூக்கிச் சென்றது. அந்தப் படத்திற்குப் பிறகுதான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் அது சில்வர் ஜூப்ளி கண்டிருக்க காரணம் திரைக்கதை. இளைஞர்களே நல்ல கதையுடன் வாருங்கள். சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஹீரோக்களை அப்படி வடிவமைக்க வேண்டும். காரணம் இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின் தொடர்கிறார்கள். படத்தில் ஒரு மூன்று நிமிடமாவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என உங்கள் காலை தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன். விமல் ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை செய்து கொண்டிருந்தார்.
இடையில் கொஞ்சம் மேலே கீழே என மாறியது. சினிமா என்றால் அப்படித்தான், சமீபத்தில் ஓடிடியில் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் சீரிஸ் பார்த்தேன். இவ்வளவு பெரிய நடிகனை சினிமா எப்படி விட்டு வைத்திருக்கிறது? நானே ஏன் இத்தனை வருடமாக விமலை விட்டு வைத்தேன் என வருத்தப்பட்டேன்.
அப்படி ஒரு நல்ல நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கிறார் எழில். இந்த படம் அனைவருக்கும் மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது சம்பந்தமாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசிய போது ”மூத்த இயக்குநராக மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் இன்றைய உச்ச நட்சத்திரமான விஜய் என்கிற நடிகரை உருவாக்கிய தகப்பனின் ஆதங்கம், குமுறல் என்பது மட்டுமல்ல, விஜய் மற்றும் அவர் நடிக்கும் படங்களை இயக்கவுள்ள இயக்குநர்களுக்கான எச்சரிக்கை என்று தான் கூற வேண்டும்.
மகனை வளர்த்து உச்சத்தில் அமர வைத்த அம்மாவும், அப்பாவும் அருகில் நெருங்கவோ, மனம் விட்டு பேசவோ முடியாத கையறு நிலையில் இருக்கும் தகப்பன் திரைப்பட விழாவில் தன் மகனுக்கு கூறிய செய்தியாகத்தான் பார்க்க வேண்டும். சினிமாவை தொடர்ந்து அரசியல் கட்சியை விஜய் தொடங்கப் போகிறார்.
அதற்கான வேலைகள் தீவிரமடைந்திருக்கின்றன என்கிற தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அதற்கான அடிப்படை கட்டமைப்பை விஜய் ரசிகர் மன்றத்தைத் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கிக் கட்டுக்கோப்பாக வார்த்தெடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அந்த அமைப்பு அரசியல் பிரவேசத்துக்குத் தயாராகி வருகிறபோது அதனை உருவாக்கிய தான் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியவனாக இருக்கிறோமே என்கிற ஆதங்கம் என்றவர்கள், எழிலை மனம் திறந்து பாராட்டியவர் அந்த விழாவின் மூலம் தன் மனக்குமுறலையும் மகனுக்கு சொல்லியிருக்கிறார், எச்சரித்திருக்கிறார்” என்று தான் கூற வேண்டும் என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– இராமானுஜம்
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!
SA chandrasekar speech