தமிழ்நாட்டு சாம்பாருக்கு தனி சுவை இருப்பது போல, கேரளா பாணியில் தயாரிக்கப்படும் சாம்பாருக்கும் தனித்துவமான மணமும் ருசியும் உண்டு. குறிப்பாக தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்களை வறுத்து அரைத்து சேர்ப்பதுதான் இதன் முக்கிய சிறப்பு. ஓணம், திருமணம் போன்ற விசேஷ நாட்களில் பரிமாறப்படும் இந்த சாம்பாரை வீட்டிலும் எளிதாகச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
சாம்பாருக்கு:
- துவரம் பருப்பு – 1 கப்
- கலவையான காய்கறிகள் – 2 கப்
- புளி – எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
மசாலாவுக்கு:
- துருவிய தேங்காய் – 1 கப்
- மல்லி விதை – 2 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 5
- கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் – ½ டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் மசாலா தயாரிப்பது எப்படி?
கடாயில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி விதை, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
பின்னர் 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். தேங்காய் கருகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தக் கலவை ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பருப்பு, காய்கறிகளை வேகவைக்கவும்
1 கப் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் 2 கப் நறுக்கிய கலவைக் காய்கறிகளை வேகவைத்து, அதில் கரைத்த புளித்தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். புளியின் பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். தொடர்ந்து வேகவைத்த பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இறுதியில் தாளிப்பு
சிறிய கடாயில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5 முதல் 6 மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இந்தத் தாளிப்பை சாம்பாரில் ஊற்றி நன்றாகக் கலந்தால் கமகமக்கும் கேரளா சாம்பார் தயார். சூடான சாதம், இட்லி, தோசையுடன் பரிமாறினால் அதன் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
