எதனால் சுவரில் ஈரம் வருகிறது?
மழைக்காலம் வந்தாலே பல வீடுகளில் சுவர் ஈரக்கசிவு பிரச்னை தலைதூக்கும். வெளிப்புறச் சுவர் அல்லது மொட்டை மாடியில் இருக்கும் சிறிய விரிசல்கள் வழியாக மழைநீர் சுவருக்குள் புகுவது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
தரைப்பகுதியில் இருந்து மேல்நோக்கி ஈரம் ஏறுவதும் ஒரு காரணம்.
தரமான வாட்டர்ப்ரூஃபிங் இல்லாதது,
சுவருக்குள் செல்லும் நீர்க்குழாய்களில் கசிவு,
மொட்டை மாடியில் மழைநீர் தேங்குவது போன்றவையும் பிரச்னையை அதிகப்படுத்தும்.
ஈரக்கசிவை அலட்சியப்படுத்தினால்…
சுவரில் தொடர்ந்து ஈரம் இருந்தால் முதலில் பெயிண்ட் உரிந்து, சிமெண்ட் பலவீனமாகலாம். அதோடு கருப்பு அல்லது வெள்ளை நிற பூஞ்சை படர்ந்து அறைக்குள் துர்நாற்றமும் ஏற்படலாம்.
ஈரப்பதத்துடன் இருக்கும் சூழல் சிலருக்கு சுவாச ஒவ்வாமை போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
மின்சார வயரிங் இருக்கும் சுவரில் ஈரம் படுவது கூடுதல் கவனம் தேவைப்படும் விஷயம். மின்சாரக் கோளாறு ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால், காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வது நல்லது.
விரிசல் இருந்தால் என்ன செய்வது?
சுவரில் கசிவு இருப்பது தெரிந்தவுடன் மேலோட்டமாக பெயிண்ட் அடிப்பதை மட்டும் தீர்வாகக் கருதக் கூடாது. முதலில் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய வேண்டும். சிறிய விரிசல்களை உரிய crack filler அல்லது PU sealant மூலம் அடைக்கலாம்.
வெளிப்புறச் சுவர்களுக்கு வாட்டர்ப்ரூஃப், உட்புறத்தில் மீண்டும் பெயிண்ட் செய்வதற்கு முன் damp-block primer மற்றும் பொருத்தமான putty-யும் பயன்படுத்தலாம்.
மழைக்கு முன்பே இந்த வேலையை முடித்துவிடுங்கள்!
மொட்டை மாடியில் தேங்கியுள்ள இலைகள், குப்பைகளை அகற்றி, மழைநீர் வெளியேறும் துளைகள் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாடியில் உள்ள விரிசல்களையும் முன்கூட்டியே சரிசெய்வது பயனுள்ளதாக இருக்கும்.
சுவர் ஈரக்கசிவுக்கு வெளிப்புறக் காரணமா, குழாய் கசிவா அல்லது அடித்தள ஈரமா என்பதை சரியாக கண்டறிந்து தீர்வு காண்பதே நீண்டகாலப் பாதுகாப்புக்கு முக்கியம்.
