வீட்டிலிருந்து வேலை செய்வது வசதியாக இருந்தாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியைப் பார்ப்பது முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக சரியான இருக்கை வசதி இல்லாமல் சோபா அல்லது கட்டிலில் அமர்ந்து வேலை செய்வது பிரச்சினையை அதிகரிக்கலாம்.
சரியான நாற்காலி அவசியம்
முதுகிற்கு போதுமான ஆதரவு தரும் நாற்காலியைத் தேர்வு செய்வது முக்கியம். உட்காரும்போது கால்கள் தரையில் நன்றாகப் பதிந்திருக்க வேண்டும். முதுகை சாய்த்து வசதியாக அமருவதுடன், நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
லேப்டாப் இருக்கும் இடத்தை மாற்றுங்கள்
லேப்டாப் அல்லது கணினித் திரை மிகவும் கீழே இருந்தால், தொடர்ந்து குனிந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கழுத்து, தோள் மற்றும் முதுகில் அழுத்தம் ஏற்படலாம். லேப்டாப் ஸ்டாண்ட் அல்லது புத்தகங்களைப் பயன்படுத்தி திரையை கண் மட்டத்திற்கு அருகில் கொண்டு வரலாம்.
வேலைக்கு நடுவே எழுந்து நடக்கவும்
மணிக்கணக்கில் தொடர்ந்து அமர்ந்திருப்பதைவிட, இடையிடையே எழுந்து சில நிமிடங்கள் நடப்பது நல்லது. சுமார் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உடல் நிலையை மாற்றுவது முதுகு மற்றும் கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தினசரி நீட்டிப்புப் பயிற்சி
காலையிலோ மாலையிலோ சிறிது நேரம் எளிய உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். கழுத்து, தோள் பகுதிகளை மெதுவாக நீட்டுவதும், முதுகுத்தண்டை இயக்கும் பயிற்சிகளைச் செய்வதும் உதவியாக இருக்கும். தூங்கும்போது உடலுக்கு ஏற்ற மெத்தையையும் பயன்படுத்துவது அவசியம்.
உணவு, தண்ணீரிலும் கவனம்
போதுமான தண்ணீர் குடிப்பதுடன், எலும்பு ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்கும் உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக, முதுகுவலி தொடர்ந்து நீடித்தாலோ, வலி அதிகரித்தாலோ வீட்டிலேயே பயிற்சிகளை மட்டும் செய்து கொண்டிருக்காமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.
