விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். தேங்காய், வெல்லம் சேர்த்த பூரணத்துடன் செய்யப்படும் இந்த பாரம்பரிய இனிப்பு, வீட்டில் பண்டிகை சமையலுக்கு தனி சுவை சேர்க்கும். ஆனால், கொழுக்கட்டை செய்யும்போது மாவு வெடிப்பது பலருக்கும் இருக்கும் சிக்கல். சில அடிப்படை விஷயங்களை கவனித்தாலே இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.
கொதிக்கும் தண்ணீர்தான் முக்கியம்
அரிசி மாவைப் பிசையும்போது நன்றாகக் கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் ஊற்றாமல், மாவின் பதத்துக்கு ஏற்ப சேர்ப்பது அவசியம்.
தண்ணீர் சரியான அளவில் சேர்ந்ததும், கை பொறுக்கும் சூட்டுக்கு மாவை ஆறவிட்டு, சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி நன்றாகப் பிசையுங்கள்.
மாவு காயாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
பிசைந்த மாவை நீண்ட நேரம் திறந்து வைத்தால் அதன் மேற்பரப்பு காய்ந்து விடும். இதனால் கொழுக்கட்டை பிடிக்கும்போது விரிசல் ஏற்படலாம்.
எனவே, பயன்படுத்தும் வரை மாவை ஈரத்துணியால் மூடி வைத்திருப்பது நல்லது. மாவு மென்மையாகவும் தளர்வாகவும் இருக்க வேண்டும்.
பூரணத்தை அளவாக வையுங்கள்
கொழுக்கட்டையின் மேல் மாவை மிகவும் மெல்லியதாகத் தட்டுவதும், அதற்குள் அதிகமான பூரணத்தை நிரப்புவதும் வெடிப்புக்கு வழிவகுக்கும். மாவின் ஓரங்களில் போதிய இடம் விட்டு, தேவையான அளவு பூரணத்தை மட்டும் வைத்து மூட வேண்டும்.
மூடிய பிறகு ஓரங்களை மெதுவாக அழுத்தி நன்றாகச் சேர்க்கவும். சிறிய விரிசல் இருந்தாலும் ஆவியில் வேகும்போது அது பெரிதாகிவிடும்.
ஒரு சிறிய சோதனை போதும்!
முழுவதுமாக கொழுக்கட்டை செய்யத் தொடங்குவதற்கு முன், சிறிதளவு மாவை எடுத்து தட்டி பாருங்கள். ஓரங்களில் விரிசல் இல்லாமல் வந்தால் மாவு சரியான பதத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதே முறையில் மாவைத் தயார் செய்தால், ஆவியில் வேகும்போது கொழுக்கட்டை வெடிக்காமல் மென்மையாகவும் அழகாகவும் வரும்.
