இளைஞர்களை ஈர்க்கும் ‘சுகர் கட்’ டிரெண்ட்
சர்க்கரையை உணவில் இருந்து குறைப்பது, குறிப்பாக சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பது, தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படும் உணவுப் பழக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
21 முதல் 30 நாட்கள் வரை சர்க்கரையைத் தவிர்ப்பதால் உடல் எடை, ஆற்றல் மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது.
ஆனால் ‘No Sugar’ என்பது பழங்கள், பால் போன்றவற்றில் இயற்கையாக இருக்கும் சர்க்கரையையும் முழுமையாக தவிர்ப்பது என்று அர்த்தமல்ல.
பொதுவாக சேர்க்கப்படும் சர்க்கரையை குறைப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது.
உணவில் என்ன சேர்க்கலாம்?
சர்க்கரையை குறைக்கும் காலத்தில் ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை, பாசிப்பயறு, ராஜ்மா போன்ற பருப்பு வகைகளுடன் முட்டை, மீன், சுண்டல் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்ப்பது நிறைவான உணர்வைத் தரும்.
ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களையும் உணவில் சேர்க்கலாம்.
மறைமுக சர்க்கரையில் கவனம்
சர்க்கரையை குறைக்க முயற்சிப்பவர்கள் தேநீர் அல்லது காபியில் சேர்க்கும் சர்க்கரையை மட்டும் கவனித்தால் போதாது.
பாக்கெட் ஜூஸ், குளிர்பானங்கள், சாஸ், சுவையூட்டப்பட்ட யோகர்ட், கார்ன் ஃப்ளேக்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் சேர்க்கப்பட்ட சர்க்கரை இருக்கலாம். எனவே பொருட்களின் லேபிளைப் படிப்பது முக்கியம்.
30 நாட்களுக்கு பிறகு என்ன மாற்றம்?
சேர்க்கப்பட்ட சர்க்கரையை குறைப்பது உடல் எடை மற்றும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடும். அதேநேரம், ஒரு மாதம் மட்டும் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பழைய உணவுப் பழக்கத்துக்குத் திரும்பினால் அதன் பலன் நீடிக்காது. நீண்ட காலத்திற்கு அளவைக் கட்டுப்படுத்தி, சமநிலையான உணவைப் பின்பற்றுவதுதான் முக்கியம்.
