வீட்டில் நீண்ட காலமாக இருக்கும் தங்க நகைகள் நாளடைவில் மங்கலாகத் தோன்றுவது இயல்பானது. வியர்வை, ஈரப்பதம் மற்றும் தொடர்ந்து ஏற்படும் உராய்வு போன்ற காரணங்களால் நகைகளின் பொலிவு குறையலாம். தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கும் நகைகளை கூடுதல் கவனத்துடன் பராமரிப்பது அவசியம்.
வெல்வெட் துணியில் தனியாக வையுங்கள்
22 கேரட் தங்கம் மென்மையானது என்பதால், நகைகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது கீறல்கள் ஏற்படலாம். எனவே ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக மென்மையான வெல்வெட் துணியில் சுற்றி வைப்பது நல்லது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களையும் தவிர்க்க வேண்டும்.
பூந்திக்கொட்டை தண்ணீர் பயன்படுத்தலாம்
நாம் அணியும் நகைகளில் வியர்வை மற்றும் உப்பு படிவங்கள் சேர்வதால் பொலிவு குறையலாம். பூந்திக்கொட்டையை (Soapnut) ஊறவைத்த தண்ணீரில் நகைகளை சுத்தம் செய்வது அழுக்கு மற்றும் உப்புப் படிவங்களை அகற்ற உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமில பாலிஷில் கவனம் தேவை
நகைகளுக்கு பாலிஷ் போடும்போது பயன்படுத்தப்படும் சில அமிலக் கரைசல்கள், நகையின் மேற்பரப்பில் தேய்மானத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் நகையின் எடையிலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே பழைய நகைகளை பாலிஷ் செய்யும்போது நம்பகமான நகைக்கடையைத் தேர்வு செய்வது முக்கியம்.
ரசீது, HUID விவரங்களை பாதுகாக்கவும்
தங்க நகைகளின் ரசீது, எடை மற்றும் ஆறு இலக்க HUID போன்ற விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். நகைகளின் புகைப்படங்களையும் ரசீதுகளையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்தால் எதிர்பாராத நேரங்களில் உதவியாக இருக்கும்.
