இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வாசனை திரவியங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆல்கஹால் மற்றும் செயற்கை ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் பாரம்பரிய அத்தர், அதன் தனித்துவமான மணத்துக்காக இன்றும் தனி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகள் விதவிதமான வாசனை எண்ணெய்களுக்குப் புகழ்பெற்றுள்ளன.
கன்னோஜ்… இந்தியாவின் வாசனைத் தலைநகரம்
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ், இந்தியாவின் முக்கிய அத்தர் உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்கு ‘தேக்-பப்கா’ எனப்படும் பாரம்பரிய முறையில் மலர்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ரோஜாவிலிருந்து பெறப்படும் ‘ரூ குலாப்’ மற்றும் மழைக்குப் பிறகு மண்ணில் வீசும் மணத்தை நினைவுபடுத்தும் ‘மிட்டி அத்தர்’ ஆகியவை இங்குள்ள பிரபல தயாரிப்புகள்.
மைசூர் சந்தன எண்ணெயின் தனி மதிப்பு
கர்நாடகாவின் மைசூர் பகுதி சந்தனத்துக்குப் பெயர் பெற்றது. சந்தன எண்ணெய் பல பாரம்பரிய அத்தர்களில் அடிப்படை மணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான சந்தன எண்ணெயின் விலை உயர்வு, அத்தர் தயாரிப்புச் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மல்லி முதல் காஷ்மீர் குங்குமப்பூ வரை
தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் விளையும் மல்லிகை மலர்களிலிருந்து வாசனை எசென்ஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த மலர் மணம் சர்வதேச பர்ஃப்யூம் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் குங்குமப்பூ மற்றும் லாவண்டர் போன்றவற்றிலிருந்து வாசனை எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. குங்குமப்பூவின் அரிதான தன்மை காரணமாக அதன் வாசனை சார்ந்த தயாரிப்புகளுக்கும் சந்தையில் மதிப்பு உள்ளது.
‘லிக்விட் கோல்டு’ எனப்படும் உத்
வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமில் காணப்படும் அகர் மரத்திலிருந்து பெறப்படும் ‘உத்’ அல்லது Oudh, உலகின் விலை உயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட அகர் மரங்களில் உருவாகும் இயற்கையான மாற்றத்தால் இந்த அடர்த்தியான மணம் கொண்ட எண்ணெய் உருவாகிறது.
அரபு நாடுகளிலும் சர்வதேச வாசனைத் திரவிய சந்தையிலும் உத்துக்கு நீண்ட காலமாக தேவை இருந்து வருகிறது.
