கண்ணுக்கு கீழே கருவளையம், வீக்கமா? இதற்கு காரணமாகும் 8 விஷயங்கள் இவை!

Published On:

| By Minnambalam Desk

கண்ணுக்கு கீழே கருவளையம் அல்லது பை போன்ற வீக்கம் ஏற்பட்டால், அதை வெறும் அழகு சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. தூக்கமின்மை முதல் உணவுப் பழக்கம், சைனஸ் பிரச்சினை வரை பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம். கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது என்பதால், உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட இந்தப் பகுதியில் வெளிப்பட வாய்ப்புள்ளது.

கருவளையத்துக்கு காரணமாகும் 8 விஷயங்கள்

ADVERTISEMENT

1. முதுமை: வயது அதிகரிக்கும்போது கண்களுக்கு கீழே உள்ள கொழுப்பு குறைவதால், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து வீக்கம் ஏற்படலாம்.

2. சைனஸ் மற்றும் சளி: சைனஸ் பிரச்சினை, வைரஸ் காய்ச்சல், ஜலதோஷம் அல்லது மூக்கடைப்பு இருந்தாலும் கண்களுக்கு கீழே வீக்கம் மற்றும் கருவளையம் ஏற்படலாம்.

ADVERTISEMENT

3. தூக்கமின்மை: இரவில் போதுமான நேரம் தூங்காமல் இருந்தால் கண்களைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் புடைத்துத் தெரிவதால் கருவளையம் மற்றும் வீக்கம் அதிகமாகத் தெரியும்.

4. அதிகப்படியான வெயில்: நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும் கண்களைச் சுற்றி கருமை ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ADVERTISEMENT

உணவுப் பழக்கமும் முக்கிய காரணம்

5. ஊட்டச்சத்து குறைந்த உணவு: பழங்கள், காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளைத் தவிர்ப்பதால் சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து, கண்களுக்கு கீழே வீக்கம் அல்லது பைகள் தோன்றலாம்.

6. அதிக உப்பு: உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் உடலில் திரவம் தேங்கலாம். இந்த அதிகப்படியான திரவம் கண்களைச் சுற்றி சேர்ந்து வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேக்கப் பயன்படுத்துபவர்கள் கவனம்!

7. தவறான அழகு சாதனங்கள்: புதிய அழகு சாதனப் பொருளைப் பயன்படுத்திய பிறகு கண்களைச் சுற்றி வீக்கம் அல்லது கருமை ஏற்பட்டால், அதில் உள்ள ஏதேனும் வேதிப்பொருள் சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். தொடர்ந்து பயன்படுத்தாமல் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

8. நீண்ட நேரம் மேக்கப் வைத்திருப்பது: இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை முழுமையாக அகற்றாமல் இருப்பதும் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தைப் பாதிக்கலாம்.

வீக்கத்தைக் குறைக்க சில எளிய வழிகள்

பயன்படுத்திய டீ பேக்கை நன்றாக ஆறவைத்து, மூடிய கண்களின் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்திருக்கலாம். வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீதும், கீழ்ப்பகுதியிலும் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்.

அதேபோல், குளிர்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனை வீக்கம் உள்ள இடத்தில் மெதுவாக வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். களைப்பு அல்லது அழுகைக்குப் பிறகு வீக்கம் ஏற்பட்டிருந்தால், 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்குவதும் உதவியாக இருக்கும்.


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share