சருமத்தில் எண்ணெய் அதிகமாக இருந்தாலே அதை பிரச்சனை என்று நினைத்து பலரும் அடிக்கடி முகம் கழுவுவதும், பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.
ஆனால், சருமத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் உடலுக்கு தேவையற்றது அல்ல. அது சருமத்தையும் முடியையும் பாதுகாக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது.
செபம் என்றால் என்ன?
முகம், உச்சந்தலை, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் ‘செபம்’ என்ற இயற்கை எண்ணெயை சுரக்கின்றன. இதில் கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை உள்ளன. இது சருமத்தை மென்மையாக வைத்திருப்பதுடன், அதிகப்படியான நீர் இழப்பையும் தடுக்கிறது.
கண்ணிமைகளில் இருக்கும் மெய்போமியன் சுரப்பிகளும் முக்கியமானவை. அவை சுரக்கும் எண்ணெய் கண்ணீரை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
எண்ணெய் சுரப்பை குறைத்தால்?
சருமத்தின் இயற்கை எண்ணெயை தொடர்ந்து அகற்றும்போது வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சிலருக்கு எக்ஸிமா, பொடுகு போன்ற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது.
கண்ணில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் குறைந்தால், கண்களில் ஈரப்பதம் குறைந்து ‘ட்ரை ஐ’ பிரச்சனை ஏற்படலாம்.
எந்தப் பழக்கங்கள் பாதிக்கும்?
கடுமையான ரசாயனங்கள் கொண்ட சோப்புகளை அடிக்கடி பயன்படுத்துவது சருமத்தின் இயற்கை எண்ணெயை அகற்றக்கூடும். ஆல்கஹால் அதிகம் கொண்ட அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதும் சருமத்தை வறட்சியடையச் செய்யலாம்.
அதேபோல் தூக்கமின்மை, நீண்டகால மன அழுத்தம் மற்றும் உணவில் போதுமான நல்ல கொழுப்புகள் இல்லாதது போன்ற காரணிகளும் உடலின் இயற்கையான சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
காலநிலையும் ஒரு காரணம்
சருமத்தில் எண்ணெய் சுரக்கும் அளவு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. வயது, மரபியல், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழும் காலநிலை ஆகியவை இதில் தாக்கம் செலுத்துகின்றன.
வெப்பமான, ஈரப்பதமான பகுதிகளில் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவது இயல்பானதாக இருக்கலாம்.
எனவே, சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெயை முழுமையாக எதிரியாகப் பார்ப்பதைவிட, அதன் சமநிலையைப் பாதுகாப்பதே முக்கியம். தொடர்ந்து வறட்சி அல்லது சருமப் பிரச்சனை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
