திருநங்கைகள் குறித்த இயக்குநர் மோகன்ஜியின் கருத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் டோரதி. மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் மோகன்ஜி தெரிவித்துள்ள சர்ச்சை கருத்துக்கு படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “டோரதி படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை அளித்தமைக்கு நன்றி. படம் வெளியாகி 20 நாட்கள் ஆகப்போகிறது. நான் தியேட்டர்களுக்கு சென்று மக்களின் வரவேற்பைப் பார்த்தேன். சிலர் படத்துடன் மிகவும் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் சிறிய மாற்றம் தெரிந்தது. அது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அதேசமயம், இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சிலர் படத்தை குறிவைத்துத் தவறான தகவல்களைப் பரப்பினர்; அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோன்று ஒரு படம் வந்துவிடக்கூடாது என்று சிலர் எண்ணினர்; ஒரு திருநங்கையை மையப்படுத்திய படத்தை வெற்றியடையச் செய்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். அதை மீறி டோரதி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது. படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துவிட்டதால், நான் அதைப் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை.
இப்படியான நிலையில், என் குழுவினர் ஒரு வீடியோவை என்னிடம் காட்டினார்கள். அது என்னை மிகவும் காயப்படுத்துவதாகவும் கோபப்படுத்துவதாகவும் இருந்தது. அதில் இயக்குனர் மோகன் ஜி, டோரதி படம் பற்றி ஊடக விவாதம் ஒன்றில் பங்கேற்றார். அந்த விவாதத்தில் நேகா என்ற திருநங்கையும் பங்கேற்றார். அதில் படத்தைப் பற்றி மோகன் ஜி நிறைய பேசுகிறார்; அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
அந்த விவாதத்தில் அவர் நேகா அக்காவிடம், “கல்யாணம் பண்ணி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அவர், “ஒரு பையன் ஒரு திருநங்கையை காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான்; அவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள், அன்பைப் பகிர்ந்துகொண்டு இணைந்து வாழ்வார்கள்” என்று தெளிவாகச் சொல்கிறார். ஆனால், இவர் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியாக, “உங்களால் நார்மலாக உடலுறவு வைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப் பெற முடியுமா?” என்கிற கேள்வியை நேகாவின் முகத்திற்கு நேராக ஒரு ஊடகத்தின் முன் வைக்கிறார்.
இதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு விஷயம் புரிகிறது; எனது டோரதி படம் திருநங்கைகளைச் சமமான மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், அதையெல்லாம் மீறிப் பொதுவெளியில் திருநங்கைகள் மீதான வன்மத்தையும் வெறுப்புணர்வையும் பரப்புவது அப்பட்டமான உளவியல் ரீதியான வன்முறையாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீங்கள் டோரதி படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், விமர்சியுங்கள்; ஆனால், மனிதாபிமானம் என்று ஒன்று உள்ளது. “திருமணம் என்றால் முறையாக உடலுறவு வைத்துக் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையின் இலக்கா? நாயும் பன்றியும் கூடத்தான் அதைச் செய்து வாழ்கிறது; அதுதான் மனிதர்களுக்கான இலக்காக இருக்க முடியுமா?” பல நேரங்களில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், அவர்கள் வாழத் தகுதியில்லாதவர்களா? அவர்கள் சந்தோஷமாக இணைந்து ஒன்றாக இருப்பதற்கு தகுதி இல்லையா?
இது பாலியல் பாகுபாடு காட்டி வெளிப்படையாக உளவியல் ரீதியாகத் தாக்குதல் நடத்துவதாகும்; இது மிகவும் தவறானது. மதரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் தவறான கருத்துகளைத் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்; அதேபோல் இதற்கும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பாலினம் தொடர்பாக ஒருவரைத் தரம்குறைத்துப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை இனிமேல் செய்யாதீர்கள்.
அதேபோல், இதை ஒருவர் வெளிப்படையாகச் செய்ய முடிகிறது என்கிற அளவில்தான் நாம் இருக்கிறோம் என்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. அதனால், நான் மோகன்ஜி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்; இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். அவர் இனிமேல் இதுபோன்று பேசுவதற்கு மற்றவர்களும் அனுமதிக்காதீர்கள். ஏனெனில், எதிரில் இருப்பவர்கள் மனிதர்கள்; அவர்களைக் காயப்படுத்துவதற்கு உங்களுக்கு யாரும் உரிமை அளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.
