நடிகர் நெப்போலியன் நடித்துள்ள, ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் நெப்போலியன் நடித்துள்ள படம் அமெரிக்க ஆவி. முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தமிழ் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.
இதை தஞ்சை ஜேபிஆர் இயக்கியுள்ளார். நேஷ் வில் பிரபு ஒளிப்பதிவு செய்ய ஆதிஷ் உத்திரியன் இசையமைத்துள்ளார்.
ஜீவன் ஃபிலிம் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 9ஆம் தேதி சென்னை கமலா திரையரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி, தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து இசையை வெளியிட்டனர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவரும் இயக்குனருமான ஆர் கே செல்வமணி, நடிகை ரோஜா , இயக்குனர் பாண்டியராஜன் பண்டோரா, தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நெப்போலியன் பேசும்போது, “இதில் உள்ளவர்கள் எல்லோருமே மருத்துவர்கள், சயின்டிஸ்ட், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என பெரிய பெரிய பொறுப்பில், பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். அவர்கள் கொடுக்கும் நேரத்தை வைத்து இந்த முழு படத்தையும் எடுத்திருக்கிறேன்.
திங்கள் முதல் வெள்ளி வரை எல்லோரும் பிசியாக இருப்பார்கள். எனவே அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு 75 நாட்களில் இந்த படத்தை முடித்துள்ளேன்.
இவர்கள் யாருக்குமே சினிமாவை பற்றி தெரியாது. ஏன் ஷூட்டிங்கை கூட அவர்கள் பார்த்ததில்லை. எல்லோருக்கும் நானும் இயக்குனரும் உட்கார்ந்து பயிற்சி கொடுத்து, தயார் செய்து நடிக்க வைத்திருக்கிறோம்.
மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் அமெரிக்கர்கள் என எல்லோரையும் நடிக்க வைத்திருக்கிறேன்.
சிவாஜி நடித்த பாரதவிலாஸ் படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். அந்த அளவுக்கு இது வித்தியாசமான படம்” என்று கூறினார்.

இயக்குனர் தஞ்சை ஜே பி ஆர் கூறுகையில், ”இதற்கு முன் ஓநாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தேன். பிறகு குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன். ஒருமுறை நெப்போலியன் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா. அதற்கான கதை இருக்கிறதா என்று கேட்டார். முடியும் என்று கூறிவிட்டு ஒரு வாரம் கழித்து இந்த கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படி உருவான படம் தான் இது” என்று குறிப்பிட்டார்.
குணால் நெப்போலியன் பேசும்போது, ”எல்லோரும் குடும்பத்துடன் வந்து படத்தை பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆர்கே செல்வமணி பேசுவையில், ”இந்த படத்தை பார்க்கும்போது ’மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தை பார்ப்பது போலவே இருக்கும். அந்த விஷயத்தை இவர்கள் ட்ரெய்லரில் காட்டவில்லை. ஏறக்குறைய 250 மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட பொறியாளர்கள் தான். அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் இது. வெளியில் 300 கார்கள் நின்று கொண்டிருந்தன. என்ன இவ்வளவு கார்கள் நிற்கிறது என்று உள்ளே சென்று பார்த்த போது தான் எல்லோரும் ஆர்டிஸ்ட்கள் என்று தெரியவந்தது. இந்த படத்தில் வரும் பாடலில் சிறப்பாக நடனம் ஆடி இருக்கிறார்கள்.
நெப்போலியனை பொறுத்தவரை எந்த வேலையாக இருந்தாலும் சுத்தமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார். அது நடிகராக இருந்தாலும் சரி, நடிகர்கள் சங்க தலைவராக இருந்தாலும் சரி. எடுத்த வேலையை அவ்வளவு அழகாக செய்வார். அதில் ஈகோ எதுவும் பார்க்க மாட்டார். அவ்வளவு நல்ல மனிதர். நடுவில் அவரை கொஞ்சம் நான் மிஸ் செய்து விட்டேன். அமெரிக்காவுக்கு சென்றால் அங்கு ஒரு தாய் வீடு உள்ளது. அது நெப்போலியன் வீடு. பணக்காரன் ஏழை என்று பார்க்காமல் அவரை யார் தேடி வந்தாலும் அவ்வளவு மரியாதை கொடுப்பார் . அன்பாக பார்த்துக் கொள்வார்” என்றார்.

நாசர் பேசுகையில், ‘கிழக்கும் மேற்கும் படம் முதல் எனக்கும் நெப்போலியனுக்கும் இடையேயான பயணம் தொடங்கியது. ஏறக்குறைய 35 ஆண்டுகள் பயணம். நாள் முழுவதும் ஒன்றாகத்தான் இருப்போம். ஒரு மனிதராக இப்போது எப்படி இருக்கிறாரோ அதேபோலத்தான் அப்போதும் இருப்பார். கஷ்டப்பட்டு உழைத்தால் கோடீஸ்வரன் ஆகலாம். சூப்பர் ஸ்டார் ஆகலாம். ஆனால் எல்லோரும் நெப்போலியன் பற்றி பேசும்போது ‘நல்ல’ என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள். இது எல்லோருக்கும் கிடைக்காது. பல மைல் தூரம் கடந்திருந்தாலும் என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்’ என்று பாராட்டினார்.
திகில் மற்றும் நகைச்சுவை கலந்த கலவையாக உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இதோ…
