டிஜிட்டல் திண்ணை: விக்ரம் வெற்றியை கட்சிக்கு பயன்படுத்தலாமா? கமல் பதில்!

Published On:

| By Aara

அலுவலகம் வந்ததும் வைஃபை  செல்போனில் கனெக்ட் ஆனது. நண்பர்  ஒருவரிடம் இருந்து  மெசேஞ்சரில், கமல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய மாநில நிர்வாகிகள் கூட்டம் பற்றிய படங்கள் வந்திருந்தன. கூடவே அவர் மெசேஜும்.

ADVERTISEMENT

“நண்பா… அதிமுக கச்சேரிகளிலேயே மீடியாக்கள் எல்லாம் மூழ்கியிருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் நடத்தியுள்ளார். விசாரித்து ஊருக்கு சொல்க’ என்று கமல் பாணியிலேயே எழுதியிருந்தார்.

அவருக்கான பதிலை மெசேஜாக டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.

ADVERTISEMENT

 “விக்ரம் வெற்றிக் களிப்பில் இருக்கிறார் கமல். அது சினிமா வெற்றிதானே…  இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் வியூகங்கள் வகுப்பதற்காக கடந்த ஜூலை  17 ஆம் தேதி  மக்கள் நீதி மய்யத்தின் மாநில, மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து அதிமுகவினர் 300 பேர் தங்களது உறுப்பினர் கார்டை கமலிடம் கொடுத்துவிட்டு கமலிடம் இருந்து மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் கார்டை பெற்றுக் கொண்டனர். அதேபோல கமல் கலைக் கூடம் என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது.  இந்த அமைப்பின் மூலம் தமிழகம் எங்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கு கராத்தே, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளை கற்றுத் தர இருப்பதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.   நூறு பெண் ஆட்டோ டிரைவர்களும் கமல் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் மாநில, மாவட்ட நிர்வாகிகளோடு கமல் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

ADVERTISEMENT

’நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். ஏற்கனவே நகர்ப்புறங்களில் நாம் ஓரளவு வாக்குகளை வாங்கியிருக்கிறோம். கிராமப்புறங்களை நோக்கி நமது கவனம் அதிகமாக இருக்க வேண்டும். நேர்மை மட்டும்தான் நமது துணை.  ஒவ்வொரு மாநிலச் செயலாளரும் உடனடியாக பயணத்தைத் தொடங்க வேண்டும். மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நிர்வாகிகளுக்குள் பிரச்சினை ஏதாவது இருந்தால் அவற்றைத் தீர்த்து வைத்து கட்சியை மக்களிடம் எடுத்துச் செல்லும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நமக்கு யாரோடும் கூட்டணி கிடையாது. நேர்மையோடுதான் கூட்டணி. நேர்மையோடு நாம் கூட்டணி வைத்துவிட்டோமென்றால் வேறு எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்க முடியாது. எனவே மாநிலச் செயலாளர்கள் உடனடியாக நிர்வாகிகளையும் மக்களையும் சந்திக்க செல்லுங்கள்.  நானும் ஷெட்யூல் தயார் செய்துகொண்டிருக்கிறேன். உங்கள் பின்னாலேயே நானும் மக்களைத் தேடி வருவேன். இதை மக்களிடமும் சொல்லுங்கள்’ என்று பேசினார் கமல்ஹாசன்.

பேச்சின் இடையே நிர்வாகிகளுடனான கலந்துரையாடலும் நடந்தது. 

’மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சில துரோகிகள் சென்றுவிட்டார்கள். வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் சிலர் நம் கட்சிக்கு வரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை சேர்த்துக் கொள்ளலாமா?’ என்று ஒரு மாவட்ட நிர்வாகி கேட்டார்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் , ‘நமக்கு துரோகம் செய்துவிட்டு போனவர்கள்தான் அவர்கள். ஆனாலும் அவர்களை துரோகிகள் என்றே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நாம் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். அவர்களையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது.  அதேபோல வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் இங்கே யாரும் தேவையில்லை. தொண்டர்களைக் கூட்டி வாருங்கள். தொண்டர்கள் எங்கேயுமே நேர்மையாக இருக்கிறார்கள். ஆனால் வேறு கட்சிகளில் இருந்து வரும் நிர்வாகிகள் இங்கே வந்து நம் கட்சியையும் கரெப்ட் ஆக்கிவிடுவார்கள். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

அடுத்து மாநில நிர்வாகி ஒருவர், ‘விக்ரம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அதை நாம் கட்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று கேட்டார். அப்போது பல நிர்வாகிகளும் இதை ஆதரித்து கைதட்டினார்கள்.

உடனடியாக கமல், ‘அப்படின்னா உத்தம வில்லனை தூக்கி குப்பையில் போட்டுடலாமா? என்று கேட்டு சிரித்தார். பிறகு விளக்கம் அளித்த கமல், ‘விக்ரம் எல்லாரும் கொண்டாடும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதுவும் இளைஞர்கள் போதை மருந்துகளால் கெட்டுப் போய்விடக் கூடாது என்ற பெரிய மெசேஜை அந்த படம் நமது இளைஞர்களுக்கு சொல்லியிருக்கிறது. அந்த மெசேஜை எடுத்துட்டுப் போங்க. விக்ரம் எனக்கு சினிமாவில் கிடைத்த வெற்றி. சினிமா வெற்றியையும் அரசியல் வெற்றியையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நான் எல்லா வடிவங்களிலும் மக்களோடுதான் இருப்பேன். கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் சினிமா பார்க்கலாம் என்ற தொழில் நுட்பம் பரவலாகும்போது அப்போதும் அந்த வடிவத்திலும் கூட நான் மக்களுடன் இருப்பேன். விக்ரம் வெற்றியை மட்டுமல்ல, விக்ரம் சொல்லும் செய்தியையும் மக்கள்,  இளைஞர்கள் கொண்டாட வேண்டும். போதை பக்கம் செல்லக் கூடாது என்ற விக்ரம் சொல்லும் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்’ என்று விரிவாக பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

மேலும் தனது கட்சிக்கு தானே ஒன்றரை கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இதேபோல தேர்தல்  நிதிக்கு மற்ற நிர்வாகிகளும் பங்கேற்பு செய்ய வேண்டும் என்பதை தனது செய்கை மூலம் உணர்த்தியுள்ளார் கமல். 

கூட்டம் முடிந்து ஊர் சென்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் விக்ரம் கூறிய போதைப் பொருள் ஒழிப்பை அடிப்படையாக வைத்தே நகரம் முதல் கிராமம் வரை கட்சியை வளர்ப்போம் என்று  உற்சாகமாக கூறுகிறார்கள். மாநில செயலாளர்களும் தங்கள் பயணத்தைத் தொடங்கிவிட்டனர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share