கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை அரசியல் கலந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவது வேதனைக்குரியது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தை பொறுத்தவரை இங்கு எதுசெய்தாலும் அரசியலாக பார்க்கப்படுகிறது. நாங்களும் திமுகவும் அனைத்து விஷயங்களிலும் எதிரும் புதிருமாக சித்தாந்தத்தில் இருக்கிறோம்.
தமிழகத்தின் மாபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞருக்கு சிறப்பு நாணயம் வெளியிட்டதில் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம். முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாணயம் வெளியிட்டுள்ளோம்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் கலந்து பேசுவது வேதனைக்குரியது. 2017-ஆம் ஆண்டு அதிமுக – பாஜக கூட்டணியில் இல்லை. அந்தவேளையில் எம்ஜிஆருக்கு நினைவு நாணயம் வெளியிட அதிமுக அரசு கோரிக்கை வைத்தபோது மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து 2019-ஆம் ஆண்டு நாணயத்தை வெளியிட்டார்கள். மத்திய அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை.
2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கலைஞர் உடல்நிலை குன்றியிருந்தபோது அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அன்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘கலைஞர் என்னோடு டெல்லிக்கு வந்து அரசு இல்லத்தில் சிறிது காலம் தங்க வேண்டும் என்பது எனது ஆசை’ என்று மோடி பேசினார்.
நாங்கள் எதிரும் புதிருமாக இருந்தாலும் ஒரு தலைவரை மதிப்பதை அரசியல் நாகரிகமாக பார்க்கிறோம். கலைஞருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் விரும்பும்போது தமிழக பாஜக முழு ஒத்துழைப்பை கொடுப்பது எங்களது கடமை. இதில் நாங்கள் அரசியல் கலக்கவில்லை.
அரசியல் லாபத்திற்காக மத்திய அரசையும், பாஜகவையும் எடப்பாடி குறை கூறுகிறார். நாளைக்கு ஜெயலலிதாவுக்கு விழா எடுக்க வேண்டுமென்றால் கூட பாஜக முதல் ஆளாக களத்தில் இருக்கும். ஒரு கிணற்று தவளையாக எடப்பாடி அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பொலிட்டிக்கல் மெச்சூரிட்டி வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…