“நெருடலாக இல்லையா?” – பனையூரில் கடம்பூர் ராஜூ பதில்!

Published On:

| By Kavi

”தம்பி விஜய்க்கு அரசியல் வேண்டாம்” என்று கூறிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று அவரது கட்சியிலேயே இணைந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது. இந்தசூழலில் அதிமுகவில் இருந்து விலகி பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில் இன்று (ஜூன் 6) உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், சிவபதி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் தவெகவில் இணைந்தனர்.

தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் விஜய்யையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் கடுமையாக விமர்சித்தவர் கடம்பூர் ராஜூ.

ADVERTISEMENT

அதாவது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய கடம்பூர் ராஜூ,  ””V for Victory” என்றால் அது அந்த இரட்டை இலைக்கு மட்டும்தான் சொந்தம்.  அதை அன்றைக்கே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தீர்க்கதரிசனமாக நமக்கு வழங்கிச் சென்றிருக்கிறார். 

நாங்களும் விஜய் படம் பார்ப்போம், ரஜினி படம் பார்ப்போம், அஜித் படம் பார்ப்போம்; படத்தை ரசிக்கலாம், அவ்வளவுதான். , உங்கள் அரசியலை ரசிப்பதற்குத் தமிழகம் தயாராக இல்லை என்பதை அன்பு தம்பி விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

மழை பெய்தால் வந்து மறையும் வானவில் போல, விஜய்யின் அரசியலும் வந்த வேகத்தில் மறையும். விஜய் படம் ரிலீஸாகும் போது, நான் செய்தித்துறை அமைச்சராக இருந்தேன்.  ‘மெர்சல்’ பட ரிலீஸின் போது விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தீபாவளிக்குச் செவ்வாய்க்கிழமை படம் ரிலீஸாக வேண்டும், ஆனால் அதற்குரிய கூட்டம் வியாழக்கிழமைதான் நடக்கும். அப்போது விஜய் எங்களை தேடி வந்து உதவி கேட்டார். 

அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் அதிகாரிகளை வரவழைத்து, டெல்லி வரை பேசி, இரவோடு இரவாக அந்தப் பணிகளை முடித்து, திங்கள்கிழமை ஒப்புதல் வாங்கி, செவ்வாய்க்கிழமை படத்தை ரிலீஸ் செய்து கொடுத்தோம். 

அப்போது விஜய், “இந்த உதவிக்காக என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன்பட்டிருப்பேன்” என்று கூறினார். ஆனால் இன்று அதை அவர் மறந்துவிட்டார்.

கட்சி நடத்த அவருக்குத் தெரியாது, அரசியல் அவருக்கு ஒத்து வராது. நெஞ்சில் தெம்பு, தில்லு, திராணி இருந்தால் தேர்தலை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். தம்பி விஜய்க்கு அரசியல் வேண்டாம், நீங்கள் சினிமாவுக்கே திரும்புங்கள். மீண்டும் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வரும்; அப்போது உங்கள் படங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தால் நாங்கள் நிச்சயம் உதவி செய்கிறோம்” என கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார். 

இந்தநிலையில் தேர்தலுக்கு பின்னால் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டு சிலர் பிரிந்து வரும் நிலையில், கடம்பூர் ராஜூம் வந்து தவெகவில் இணைந்துள்ளார்.

இந்தசூழலில், உங்களுக்கு நெருடலாக இல்லையா என பனையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், ”ஒரு நெருடலும் இல்லை. நோக்கம் ஒன்றுதான். தேர்தல் சமயத்தில் எங்களுக்கு எதும் புலப்படவில்லை. ஆனால் மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு” என்று கூறினார்.

அதுபோன்று தவெக அலுவலகத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, ”2011-ல்   சட்டமன்றத் தேர்தலை நாங்கள் சந்திக்கின்ற நேரத்திலே எங்களுக்கு உறுதுணையாக இருந்தது யார் என்று சொன்னால், விஜய் நற்பணி மன்றம் என்பதை நாங்கள் இந்த நேரத்திலே நன்றியோடு நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம். 

2011-ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்குப் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி, நேரடியாகக் களத்திலே வந்து பணியாற்றினார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும், அவர் வாழ்கின்ற காலம் வரை தமிழகத்திற்கு முதலமைச்சராக வாழ்வார் என்ற அந்த எண்ணத்தின் படி, இன்றைக்கு நாங்கள் இந்தக் கழகத்திலே இணைந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்தசூழலில் கடம்பூர் ராஜூ பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்குள் அடித்து பிடித்தவாறு உள்ளே சென்ற வீடியோவும், முன்னதாக தனது பட வெளியீட்டிற்காக எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஜய் கடம்பூர் ராஜூடன் காத்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share