த.வெ.க.வின் வெற்றி – தோல்விக்குச் சமமானதே! – ஆசிரியர் கி.வீரமணி

Published On:

| By Pandeeswari Gurusamy

Protests against Vishwakarma Yojana on 6th September K Veeramani

தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் அந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தவெக வெற்றி என்பது தோல்விக்கு சமமானதே என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 10) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க.வின் வெற்றி – தோல்விக்குச் சமமானதே! தி.மு.க.வின் வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை!
ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்றவர்களே – கட்சி மாறி நின்று வெற்றி பெற்றது ஜனநாயகத்துக்குப் பெரும் தலைக்குனிவே!

ADVERTISEMENT

ஆறு மாதத்திற்குள் திணிக்கப்பட்டத் தேர்தல்களான மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று, நேற்று (9.10.2026) முடிவுகள் வந்ததில், ஆளும் கட்சி தனது கைவசம் உள்ள ஆட்சி பலம், பதவி பலம், பண பலம், பத்திரிகை பலம் போன்ற பலங்களைப் பயன்படுத்தி, அந்த இரண்டு தொகுதிகளிலும் பெற்ற வெற்றிதான், அந்த இரண்டுத் தேர்தல்களின் முடிவுகள் என்பது உலகறிந்த ரகசியம்!

இரு தொகுதிகளில் த.வெ.க.வின் வெற்றி –
ஜனநாயகத்திற்கும், நியாயத்திற்கும் கிடைத்த ஒன்றா?

ADVERTISEMENT

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், 5 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நின்று வென்ற இரு பெண்கள் பதவி விலகி ஆளுங்கட்சியில் சேர்ந்ததுதான்.

ஆளுங்கட்சியில் அவர்கள் இணைந்தது, அக்கட்சியின் கொள்கைக்காகவா? அல்லது ஆளுங்கட்சியாகி உள்ள அக்கட்சியிடம் அமைச்சர் பதவிக்கோ, அதை ஒத்த வேறு லாபங்களைப் பெறுவதற்காகவும்தான் என்பது அனைவரும் அறிந்ததே!
இந்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த பெருமைக்குரிய அல்லது நியாயத்தின்பாற்பட்ட வெற்றியா?

ADVERTISEMENT

மனசாட்சியுள்ளவர்கள் அப்படிக் கூற முடியுமா?

ஆளுங்கட்சி நாற்காலி முக்காலியாக இருப்பதை மாற்றி, முட்டுக்கொடுக்கத் தேவையான எண்ணிக்கைத் தேவை; இரவல் கால்தான் நாலாவது கால். அவற்றில் ஆடுவதும், ஆட்டப்படுகிறதோ என்ற அச்சத்தோடு நாளும் இருப்பதற்கு, மேலும் எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்பது ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.

தி.மு.க. கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற சில கட்சிகள் அணி மாறி ஆதரித்தது சரியா?

தி.மு.க. கூட்டணியில் நின்று, வென்று முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிக்கு ஆதரவு தரும் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை இணைத்து, சிலருக்குப் பதவிகள் தந்தது ஆரோக்கியமா?

அதற்காக, 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் என்ன செய்தாவது, எப்படியாவது வெற்றியைப் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தால், மதுராந்தகம் தொகுதியில், எல்லா எல்லைகளுக்கும் சென்றனர்.

‘அரசியலில் ஜாதி பார்க்கமாட்டோம்’ என்று சொன்னது கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா?
எல்லாவற்றையும்விட முதலமைச்சரின் இரண்டு தொகுதிகளின் ‘ரோட் ஷோ’விலிருந்து, முருங்கைக்காய் பறித்தது போல, வெற்றியையும் பறித்துவிட்டனர்.

தி.மு.க.வின் வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை!

எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள தி.மு.க., அதன் வாக்கு வாங்கியை அசைக்க முடியவில்லை.
எப்படியோ வெற்றி!
இப்படிப் பெற்ற இந்த ‘‘வெற்றிக்கு’’ ஆங்கிலத்தில் ஓர் அருமையான சொற்றொடர்மூலம் என்ன பெயர் தந்திருக்கிறார்கள் தெரியுமா?
‘Pyrrhic Victory’ அதற்கு அகாரதித் தரும் பொருள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்!
‘A Victory as bad as defeat’ தோல்விக்குச் சமமான மோசமான வெற்றி!

அதேநேரத்தில், எதிர்க்கட்சிப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கொள்கை பலத்தால் மக்களிடையே நேரிடை வழியில், கடந்த கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைக் கூறி, இப்போது 5 மாதம் ஆட்சியில், சட்டம் – ஒழுங்குச் சீர்குலைவு, அரிவாள் வெட்டு, மின்வெட்டு, ஆளுங்கட்சியினர் மீதே உயர்நீதிமன்றம் உள்படப் பலரும் சுட்டிக்காட்டிய ஊழல் குற்றச்சாட்டுகள் முதலியவை குறித்து முறையான கேள்வி கேட்டும், ஓர் எதிர்க்கட்சியின் பங்களிப்பைச் செய்தும், நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
முதலமைச்சரோ, ஆளுங்கட்சியினரோ, தேர்தல் பிரச்சாரத்தின்போது, எவற்றுக்கும் பதிலளிக்காமல், திசை திருப்பினார்கள். அது எடுபடவே இல்லை என்பதை வாக்காளர்கள், ஆளுங்கட்சியினருக்குப் புரிய வைத்துவிட்டார்கள்.

எனவே, இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது, ‘பெறப்பட்ட வெற்றி’ என்பதைவிட, ‘வாங்கப்பட்ட’ அல்லது வித்தைக் காட்சிகளினால் ‘பறிக்கப்பட்ட’ வெற்றியாகும்!
தி.மு.க. எதிர்க்கட்சியாக அதன் பணிகளைச் செம்மாந்து செய்ய உத்தரவிட்டுள்ளனர் இரு தொகுதிகளின் வாக்காளர்களும்!

அதுகூட ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் மீது ஏறி நின்றுதான் ஆளுங்கட்சியால் பறிக்கப்பட்ட வெற்றி; முருங்கைக்காய் பறிக்க உதவிய சொரட்டு போல, எது உதவியது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

ஜனநாயகம் துகில் உரிக்கப்பட்ட நிலை அல்லவா!

இரு இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி பெற்ற வெற்றி என்பதை நேர்மையாக மதிப்பிட்டால், ‘காட்சிச் சாதனை’களால் பெற்ற ‘ஆக்கிரமிப்பு வெற்றியே!’ தவிர, 5 மாத ஆட்சிச் சாதனைகளால் மக்கள் வழங்கியத் தீர்ப்பின் மூலம் கிட்டிய வெற்றி ஆகாது!

‘ஆபரேஷன் வெற்றி – நோயாளி சாவு!’

ஒரு பழமொழிதான் நினைவிற்கு வருகிறது; ஆளுங்கட்சிக்குத் ‘‘தேர்தல் என்றால், ‘ஆபரேஷன்’ வெற்றி; அதேநேரம் ‘ஜனநாயகம்’ என்ற 5 மாத நோயாளி செத்தார்’’ என்பதே பொருத்தம்!

ஜனநாயகக் கொள்கையைச் சிதைத்து, கட்சித் தாவியவர்கள் மீண்டும் வெற்றி பெற இப்படிப் பல வழிகளில், ஜனநாயகப் பொது ஒழுக்கத்திற்கும், ஜனநாயகத்தின் உண்மை தத்துவத்திற்கும் பங்கமும், பாதகமும் செய்தது, வரலாற்றில் பெரும் கறையே! இதனை வரலாறு என்றும் மறைக்காது, மறக்காது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share