தாராபுரம் மதுராந்தகம் தொகுதியில் ஆளும் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஒரு இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியிலே நடைபெற்றது.
கடந்த கால இடைத்தேர்தல் எல்லாம் எடைத்தேர்தலாக எடைக்கு எடைக்கு பணம், பொருள் மக்களை ஆடுகள், மாடுகள் போன்று சந்தையிலே அடைத்து வைத்துப் பணத்தைக் கொடுத்து, மதுவைக் கொடுத்து, உணவைக் கொடுத்து வாக்களித்து வெற்றி பெற்ற கட்சிகளையெல்லாம் நாம் பார்த்தோம்.
ஆனால், இன்று பணம் கொடுக்காமல் பிரச்சாரம் செய்து… இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஜனநாயக ரீதியிலே பிரச்சாரம் செய்து நடைபெற்ற இடைத்தேர்தல்… இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
அதேவேளையிலே, இந்த இரண்டு தொகுதிகளை ஐந்து மாதத்திற்கு முன்பு வெற்றி பெற்ற அதிமுக, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆளுங்கட்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.
அதேவேளையிலே, சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்ட அதிமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்; சுய ஆய்வு செய்ய வேண்டும்.
நான் அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. நல்ல எண்ணத்தோடுதான் நான் சொல்கின்றேன்.
ஐந்து மாதத்திற்கு முன்பு வெற்றி பெற்ற கட்சி, இன்று மூன்றாவது இடம்.. தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஆண்ட கட்சி.. அதற்காக இது நல்ல வகையான ஒரு ஆலோசனையாகத்தான் நான் சொல்கின்றேன்; தவறான எண்ணத்தில் நான் சொல்லவில்லை.” என தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டணிக்கு பாமக செல்ல வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இது எல்லாமே வதந்திதான், நாங்கள் எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லை.. இனி கேட்க போவதும் இல்லை.” என்றார்.
