என்னது ”இந்தியாவின் பிரதமர் அம்பானி”யா? சீண்டிப் பார்க்கும் எலான் மஸ்க்

Published On:

| By Mathi

Elon Ambani Modi

இந்தியாவின் Real Boss முகேஷ் அம்பானிதான் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ள எலான் மஸ்க், ‘இந்தியாவின் பிரதமர் அம்பானி’ எனக் கிண்டலடித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதானா என எலான் மஸ்க் நேற்று முன்தினம் தமது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவுக்கு வரவேற்கிறேன் எலான். இன்னொரு நபரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வரை காத்திருங்கள்” எனப் பதிவிட்டார். அதற்கு மஸ்க், “நன்றி ராகுல். இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம்” எனப் பதிலளித்திருந்தார். அதாவது எலான் மஸ்க் அம்பானியை விமர்சித்த நிலையில், அதானியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார் ராகுல் காந்தி.

ADVERTISEMENT

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அக்டோபர் 9-ந் தேதி வெளியிட்டுள்ள பதிவும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ் பதிவு: அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே! இந்தியாவின் உண்மையான முதலாளி நீங்கள்தான் என்பதை இதுவரை உணராமல் இருந்ததற்காக எனது பணிவான மன்னிப்பைக்
கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மக்களை ஏகபோக ஆதிக்கத்தின் மூலம் சுரண்டுவதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவே நீங்கள் விரும்புவீர்கள் என்பது இயல்பானதுதான். இருந்தாலும், ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் போட்டியிட அனுமதிப்பது குறித்து நீங்கள் பரிசீலிப்பீர்களா?

ADVERTISEMENT

உலகின் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இணைய வசதி இல்லாத பல பகுதிகள் உள்ளன. இதனால் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சிறு தொழில் செய்பவர்கள் தங்களது பொருட்களை உலகச் சந்தையில் விற்பனை செய்யும் வாய்ப்பையும் இழக்கிறார்கள். ஸ்டார்லிங்க் சேவை இவர்களது வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றும். நன்றி. இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கிற்கு என்ன பிரச்சினை?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாக ஸ்டார்லிங்க் செயல்பட்டு வருகிறது. வழக்கமான செல்போன் கோபுரங்கள், கண்ணாடி இழை இணைய இணைப்புகள் இல்லாத பகுதிகளிலும் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய சேவையை வழங்குவதுதான் ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம். இந்தியாவின் கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள், தொலைதூரப் பகுதிகளில் இணைய வசதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்டார்லிங்க் கூறி வருகிறது.

ADVERTISEMENT

ஆனால் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதற்கு தொலைத்தொடர்புத் துறையின் விதிமுறைகள், அலைக்கற்றை ஒதுக்கீடு, பாதுகாப்பு நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ முக்கிய நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான் ஸ்டார்லிங்கை இந்தியாவில் போட்டியிட அனுமதிக்குமாறு அம்பானியிடமே நேரடியாகக் கேட்பதுபோல எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

4.2 கோடி பார்வைகளைத் தாண்டிய பதிவு

எலான் மஸ்க் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அக்டோபர் 10-ந் தேதி அதிகாலை நிலவரப்படி, அவரது எக்ஸ் பதிவை 4.2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 2.64 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் தெரிவித்துள்ளனர். 51,000-க்கும் அதிகமானோர் ரீ ட்வீட் செய்துள்ளனர். மேலும் 46,000-க்கும் அதிகமான நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share