இந்தியாவின் “REAL BOSS” அம்பானியா? மோடி அரசு மீது எலான் மஸ்க் பாய்ச்சல்- ஏன்?

Published On:

| By Mathi

Elon Musk Modi

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து, உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் “இந்தியாவின் உண்மையான முதலாளி (REAL BOSS) அம்பானியா?” என்று எலான் மஸ்க் எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள்கள் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இந்த சேவையைத் தொடங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கு சில பெரும் தொழிலதிபர்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “இந்திய மக்களின் மீது தங்களுக்குள்ள ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக சில பெரும் பணக்காரர்கள் எங்களைத் தடுக்கின்றனர். அவர்கள் யார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தக் குற்றச்சாட்டை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மறுத்தது.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதற்கான அனுமதி நடைமுறைகள் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானவை என்றும், எந்த நிறுவனத்துக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ADVERTISEMENT

மேலும், செயற்கைக்கோள் இணைய சேவைக்கான உரிமம் பெற்றுள்ள 3 நிறுவனங்களிடமும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.

இந்த ஆய்வுகள் முடிவடைந்த பிறகே அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் மத்திய அரசு கூறியது.

மத்திய அரசின் இந்த விளக்கத்துக்குப் பிறகும் எலான் மஸ்க் தனது விமர்சனத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறார்.

இன்று (அக்டோபர் 8) தமது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டார்லிங்க் நிறுவனம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும் விதிமுறையையும் பின்பற்றுவதற்காக ஐந்து ஆண்டுகள் செலவிட்டுள்ளோம். அப்படியிருந்தும் இன்னும் ஏன் உரிமம் கிடைக்கவில்லை? இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ஸ்டார்லிங்க் சேவையை எதிர்ப்பவர்கள் இணைய வசதி குறைவாக உள்ள மக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும், இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கல்வி கற்பதற்கும், தங்களது பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்வதற்கும் ஸ்டார்லிங்க் உதவும்; இந்தியாவில் இணைய வசதி மோசமாக உள்ள பகுதிகளிலும், செல்போன் சேவை கிடைக்காத இடங்களிலும் ஸ்டார்லிங்க் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் கோபுரங்கள் அல்லது பைபர் நெட்வொர்க் கட்டமைப்பு இல்லாத பகுதிகளிலும் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய வசதி வழங்குவதுதான் ஸ்டார்லிங்கின் நோக்கம்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வணிக இணைய சேவை இன்னமும் தொடங்கப்படவில்லை.

2021-ம் ஆண்டு: இந்தியாவில் இணைய சேவைக்கான முன்பதிவுகளை ஸ்டார்லிங்க் தொடங்கியது. உரிமம் இல்லாததால் முன்பதிவுகளை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

2022-ம் ஆண்டு: இந்தியத் தொலைத்தொடர்புத் துறையிடம் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான உரிமம் கோரி ஸ்டார்லிங்க் விண்ணப்பித்தது.

2023-ம் ஆண்டு: புதிய தொலைத் தொடர்பு சட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலமின்றி ஒதுக்குவதற்கான சட்டவழி உருவானது.

2025-ம் ஆண்டு மார்ச்: இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை விற்பனை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் தனித்தனியாக ஒப்பந்தங்கள் செய்தது.

2025-ம் ஆண்டு ஜூன்: ஸ்டார்லிங்கிற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை GMPCS உரிமம் வழங்கியது. இருப்பினும், பாதுகாப்பு ஆய்வு, அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் நிறைவடையாததால் இந்தியாவில் வணிக ரீதியாக இணைய சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்கால் முடியவில்லை.

2025-ம் ஆண்டு ஜூலை: இந்திய விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான IN-SPACe அனுமதி வழங்கியது.

2025-ம் ஆண்டு செப்டம்பர்: சோதனை நடவடிக்கைகளுக்குத் தற்காலிக அலைக்கற்றை அனுமதி கிடைத்தது.

2026-ம் ஆண்டு அக்டோபர் 7: இந்தியாவில் 20 தரைவழித் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டார்லிங்க் தெரிவித்தது.

2026-ம் ஆண்டு அக்டோபர் 8: அனுமதி தாமதம் குறித்து எலான் மஸ்க் குற்றஞ்சாட்டினார். அவரது குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. அம்பானியின் பெயரைக் குறிப்பிட்டு மஸ்க் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share