சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இப்ராகிம், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழக முதல்வர் மீட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும். பைக் டாக்ஸி போன்ற செயலிகளால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; எனவே மீட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அந்த வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதநேயம் குறித்துப் பயணி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் அந்த வீயோவில் “டி.டி.கே. சாலையில் இருந்து சென்ட்ரல் நோக்கி நானும் எனது மனைவியும் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோம். அந்த ஆட்டோ ஓட்டுநர் முதலில் 250 ரூபாய் கேட்டார்; பின்னர் 200 ரூபாய்க்குப் பேசி ஏறிக்கொண்டோம். வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஆட்டோவை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் சார் என்று சொல்லி சென்ற ஓட்டுநர், சாலையோரத்தில் இருந்த வயதான ஒருவரிடம் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார்.
மீண்டும் எக்மோர் பகுதியைக் கடக்கும்போது, மற்றொருவருக்கும் உணவு வழங்கினார். அவரிடம் அது குறித்துக் கேட்டபோது, ‘சார், நாம் ஓட்டுகிறோம், சம்பாதிக்கிறோம்; யாரோ 2 பேருக்கு சாப்பாடு கொடுப்போம். என்றார். அப்போது நான் அவரிடம் நீ சாப்பிட்டயா என்று கேட்டேன், இன்னும் சாப்பிடவில்லை என்றார். அப்போது மணி கிட்டத்தட்ட மதியம் ஒன்றரை இருக்கும். ஆனால் எனக்கும் ஒரு பொட்டணம் வைத்திருக்கிறேன். எப்போதும் அன்றைய வருமானத்திற்குத் தகுந்தவாறு மூன்று, நான்கு பொட்டணங்கள் வாங்கிவிடுவேன். ரோட்டில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்றார்.
அவரிடம் வீடு எங்குள்ளது என்று விசாரித்தபோது, ‘எனது வீடு அடையாறு பக்கம். என் மனைவி வேலைக்குப் செல்கிறார்; ஒரு மகன் படிக்கிறான்’ என்றார். அதைக் கேட்டதும் நான் வெட்கப்பட்டுப் போனேன். ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு நாள் முழுமையாக ஓட்டினால்தான் அவனுக்குக் காசு கிடைக்கும். ஆனால், அவன் என் கண் முன்பே இருவருக்கு உணவு வழங்கினான்.
பயணம் முடிந்து இறங்கியதும், பேசப்பட்ட 200 ரூபாய்க்குப் பதிலாக அவரிடம் 300 ரூபாய் கொடுத்தேன். ஆனால், அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். ‘நான் சாப்பாடு வாங்கித் தந்ததைப் பார்த்துக் கூடுதலாகக் கொடுக்கிறாயா சார்? எனக்கு வேண்டாம் சார்’ என்றார். எனக்குச் செருப்பால அடித்தது போல் இருந்தது; என்னடா இவன் காசே வேண்டாம் என்கிறானே என்று வியந்துபோனேன். இது நான் படித்ததோ கேட்டதோ இல்லை, எனது சொந்த அனுபவம்.
கடைசியில் என் மனைவி வற்புறுத்திய பிறகே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். மனிதநேயம் என்பது இதுதான்; யார் என்றே தெரியாத சக மனிதனை நேசிப்பது. இலக்கியங்களைப் படிக்கிறோம், கதைகளைக் படிக்கிறோம், சினிமாவில் பார்க்கிறோம்; ஆனால் பக்கத்தில் இருப்பவன் பசியோடு கஷ்டப்படுவதைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நம்மால் முடிந்த உதவிகளை நாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்” என்று அந்தப் பயணி உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் இப்ராகிம் மறைவு ஏற்படுத்திய சோகத்திற்கு நடுவே, ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதநேயத்தை எடுத்துரைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
