திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
88 வயதான துரைமுருகன், அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தியிருந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாகக் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், தற்போது இதய நோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவிற்குப் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் துரைமுருகன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். திமுக அரசில் நீர்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர், தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்:
“என்னுடைய 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் ‘மாமன், மச்சான்’ என யாரையும் கூப்பிட்டுப் பார்த்ததில்லை. எதிரி என்றால் எதிரியாகத்தான் இருக்க வேண்டும். சபைக்குள் என்ன ‘மாமன், மச்சான்’ உறவு? அரசியல் உலகத்தில் அண்ணன் என்னடா, தம்பி என்னடா என்பதுதான் என் கேள்வி. நானும் அப்படித்தான் இருந்தேன்.
என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்., படிக்க வைத்தவரும் எம்.ஜி.ஆர். அவர் என்னை அழைத்து, ‘வாடா, மந்திரி பதவி தருகிறேன்’ என்றார். ஆனால், நான் எனது கட்சி திமுக எனச் சொன்னேன். அப்போது, எனது உறுதியைப் பாராட்டினார். அப்பேற்பட்ட, என்னை வளர்த்த தாய் உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரையே சட்டசபையில் நேருக்கு நேர் கேள்வியெழுப்பியவன் நான்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்குச் செல்ல வேண்டும்; ஆளும் கட்சிக்காரன் பாதுகாப்பு கேடயத்தோடு வர வேண்டும். இவன் சுழற்றுவான், அவன் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்கணும், இல்லையென்றால் சலாம் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.” என்று தனது சட்டமன்ற அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.
