பாஜகவின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை தவெக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ள தீவிர போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையின் முக்கிய பகுதியான பெசன்ட் நகரில் இளைஞர்கள் திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “டெல்லியில் இன்று அரங்கேறும் காட்சிகளும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடி நிலைக் காலத்தின் வேதனையான நினைவுகளை மீட்டெடுக்கின்றன.
டெல்லியிலும் தேசம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் பாஜகவின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள தவெக அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
தங்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்துவரும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மாற்றுக் கருத்து என்பது குற்றமல்ல. அதனை எழுப்பிப் பாதுகாப்பவர்களை மௌனிக்கச் செய்வதன் மூலம் ஜனநாயகம் வாழ முடியாது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா என்பது எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காதது. அவரது ராஜினாமாவுக்கு அப்பால், தேர்தல் ஆணையத்தின் நிறுவனக் கட்டமைப்புக்கு இழைக்கப்பட்ட அனைத்து சேதங்களும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
