Delhi Protest: டெல்லியில் பதற்றம்.. தலைவர்கள் கைது.. கொந்தளித்த இடதுசாரிகள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யினர் இன்று போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நொய்டா, உத்தரப் பிரதேசம் மற்றும் கிழக்கு டெல்லியை இணைக்கும் முக்கிய வழித்தடமான சில்லா எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தெற்கு டெல்லியில் 30 இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிநவீனத் திறன்கொண்ட 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எப்போதும் ஜனநெருக்கடியில் காணப்படும் சாந்தினி சவுக் மார்க்கெட் மற்றும் பாகிரத் மாளிகையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ஜன்பத், உச்ச நீதிமன்றம், லோக் கல்யான் மார்க் உள்பட 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. போராட்டம் காரணமாகப் பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுமாறு டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி மற்றும் புறநகர், வெளியூர் செல்லும் 40 விரைவு ரயில்கள் உள்பட 75 ரயில் சேவைகளை ரத்து செய்து வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் இணையதளம் துண்டிக்கப்பட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க மும்பையிலிருந்து டெல்லி வந்த அபிஜித் தீப்கே உள்ளிட்ட ‘கரப்பான் கட்சி’ நிர்வாகிகள் அதிரடியாக விமானத்திற்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான சுர்ஜித் பவனில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற தலைவர்களை காவல்துறையினர் தடுத்து குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர். இதனால், டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதுகுறித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், “டெல்லியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது ஒன்றிய அரசு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, புதுதில்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, டெல்லி காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் கடும் கண்டனத்திற்குரியவை.

ஜனநாயகத்தில் அரசிடம் கேள்வி கேட்பதும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடுவதும் மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள். அந்த உரிமைகளைப் பயன்படுத்த முன்வரும் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியையினர் ஆகியோரை ஆங்காங்கே கைது செய்வதும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பினராயி விஜயன், தோழர் உ. வாசுகி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தலைவர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காவல்துறை வாகனத்திலேயே வைத்துச் சுற்றி வருகின்றனர். CJP தலைவர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. கேள்வி கேட்பவர்களைக் கைது செய்வதன் மூலம் தேர்தல் ஆணையர் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது.

கருத்துச் சுதந்திரத்தையும் அமைதியான போராட்ட உரிமையையும் மதிக்க வேண்டிய ஒன்றிய அரசு, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது.

கைது செய்யப்பட்ட அனைத்துத் தலைவர்களையும், மாணவர்களையும், போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் குரலை அடக்க நினைப்பவர்கள் வரலாற்றின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும். போராட்டங்களை ஒடுக்குவதால் மக்களின் கேள்விகளையும் உரிமைக் குரல்களையும் ஒருபோதும் ஒழித்துவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இடது சாரிகள் கூட்டறிக்கை

இதைத்தொடர்ந்து இடது சாரிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டெல்லியில் காவல்துறை, துணை ராணுவப்படையினர் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஐந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்த பின்புலத்தில் கைது வேட்டையும், தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்து இருந்தன.

டெல்லிக்கான 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35000 காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரை கூட செவிமடுக்கப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் டெல்லியில் கைதாகி உள்ளனர்.

இடதுசாரி வாலிபர், மாணவர், அமைப்புகளின் தலைவர்கள், முன்னணி ஊழியர்களும் கைதாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில மணி நேரங்களாக காவல் வாகனத்தில் வைத்துக் கொண்டே சுற்றி வருகிறார்கள்.

ஜந்தர்மந்தர் பகுதியில் ஒன்றிய அரசின் டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளனர். போராட்டக்காரர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளனர்.

கட்சி, வெகுஜன அமைப்பு அலுவலகங்கள் துணை ராணுவப் படையாலும், ஒன்றிய அரசின் காவல்துறையினாலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஜனநாயக மறுப்பின் உச்சகட்டமாக அரங்கேற்றப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன.

இந்த அடக்குமுறை, கைதைக் கண்டித்தும், ஞானேஷ் குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share