மதுரை உயர்நிதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கு பெறுவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கே அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,”குளிர்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது SIR குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்திருக்கிறோம். வாக்கு திருட்டு பீகாரில் பிஜேபி அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் என்னவென்று விளங்கவில்லை என திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த ஒரு கோடி பேர் வாக்குரிமையை பரி கொடுப்பதோடு குடியுரிமையையும் பறிகொடுக்கக்கூடிய அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் பாஜக அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது.
பீகாரில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு சதித் திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அமித்ஷா அவர்கள் மக்களவையிலேயே உரத்து பேசுகிறார் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்று விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி. அது மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று. அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை. எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
மேலும் மத்திய அரசு அல்லது தேர்தல் ஆணையம் போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் மேற்கொள்கிற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு அதை விமர்சனமாக பார்க்க முடியாது திமுக அதை கடுமையாக எதிர்க்கிறது. ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. மாநில அரசு என்பது வேறு மாநில ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிற ஆளுங்கட்சி என்பது வேறு.
ஆளுங்கட்சி பாஜக அரசின் SIR நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே இதை நாம் இந்த அடிப்படையில் தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர திமுக ஒரு புறம் எதிர்ப்பு தெரிவிக்கிறது இன்னொரு புறம் ஆதரிக்கிறது என்ற அடிப்படையில் புரிந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்றார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனை ஊதி பெரிதாக்கி இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் உடைய தலைவர்களும் அதன் துணைநிலை அமைப்புகளும் தமிழ்நாட்டில் எப்படி காலூன்றுவது என்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உரிய தூண் அல்ல. அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட சர்வே அடையாளக் கல். அதில் தீபம் ஏற்றுவோம் என கூறி அரசியல் செய்வது முழுக்க முழுக்க மதவாத அரசியல். மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்துகிற அரசியல். வட இந்திய மாநிலங்களில் செய்தது போல் சாதி அரசியல். தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் நீதித்துறையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது பிஜேபி அரசு என்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை சார்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அளித்த தீர்ப்பு ஒரு சான்றாக இருக்கிறது. அவர் நீதிபதி என்பதை மறந்து விட்டு பொது மேடைகளில் பேசுகிற அரசியல் முழுக்க முழுக்க மதவாத அரசியலாகவும் ஆர்எஸ்எஸ் அரசியலாகவும் இருக்கிறது என்பதை காண முடிகிறது அவர் நீதிபதியாக தொடர்வதற்கு எந்த கூறுகளும் இல்லை அவருக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிறுத்தி வைக்க வேண்டும். அவர் மீது 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையொப்பமிட்டு அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறுகிற இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மக்களவை தலைவரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம்.
மக்களவைத் தலைவர் அதை பரிசீலிப்பதாக கூறுகிறார். அவருக்கு எதிராக இம்பீச்மென்ட் கொண்டு வந்துள்ள சூழ்நிலையில் நீதிபதி இருக்கையிலே நீடிப்பதற்கு ஏதுவாக கூறுகள் இல்லை. அவரே தானே முன்வந்து பதவி விலகுவது தான் நியாயமானது. அவர் வேதம் படித்தவராக தம்மை காட்டிக் கொள்கிறார் மநு தர்மத்தை பின்பற்றுவதாக காட்டிக் கொள்கிறார். அப்படி நேர்மை அவரிடத்தில் இருக்குமேயானால் அவர் பதவி விலகுவது தான் அவருக்கு அவர் பொறுப்புக்கு அழகு .
இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் அரசியலை தொடர்ந்து பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருவதும் தமிழ்நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல தமிழ்நாட்டு மக்கள் இதில் விழிப்போடு இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
