ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து இரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நேற்று உலகம் முழுவதும் சுமார் 3,500 திரையரங்குகளில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இதே படத்தில் தமிழக அமைச்சர் அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீநாத் ஆகியோரும் சில காட்சிகளில் நடித்துள்ளனர்.
படம் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, திருச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் கட்-அவுட் மீது சேவலை அறுத்து, அதன் ரத்தத்தைத் தெளித்து ரசிகர்கள் கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
விஜய் ரசிகர்களின் இந்தச் செயலுக்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதெல்லாம் என்ன மனநிலை என்று தெரியவில்லை..?
திருச்சியில், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட் அவுட் முன்பாக சேவலை அறுத்து இரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற நாளிலிருந்து நடைபெறுகிற சம்பவங்களைப் பார்த்தால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மதுபானத்தில் அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து குருதி தெறிக்க பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும்.
இவர்களைப் போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ? இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை சார்ந்தவர்களையும் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
