இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது இரங்கல் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் கே.எம்.காதர் மொகிதீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனின் பாசத்திற்குரிய மகனும், அறிவியலாளருமான கே.எம்.கே. கலீலூர் ரஹ்மானின் மறைவுச் செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன்.
பெற்றெடுத்து பேரன்பு செலுத்தி வளர்த்து, ஆன்றோர் அவையில் பெரும்புகழ் எய்திடக் கண்ட மகன் மண்ணுலகைவிட்டு பிரிந்த துயர் தாளாது வேதனையில் வாடும் காதர் மொகிதீனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
