கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 25,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து கர்நாடகாவின் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று கூட்டியுள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடிநீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டது காவிரி மேலாண்மை ஆணையம். ஆனால் கர்நாடகாவோ, ”எங்களது அணைகளில் நீர் போதுமான அளவு இல்லை; தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க முடியாது” என்றது. அத்துடன் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டமும் நடத்தினர்.
ஆனால் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்து கட்டியதால் காவிரி மற்றும் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் நிலை உருவானது. இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 8,000 கன அடி நீரை திறந்து விட தொடங்கிய கர்நாடகா அரசு தற்போது 25,000 கன அடி நீரை திறந்துவிட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து வெளியேறும் நீர் காவிரி ஆற்றில் கலந்து மேகதாது வழியாக தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வந்தடையும். அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு காவிரி நீர் செல்லும்.
இதேபோல கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது; இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
மேலும் குடகு மாவட்டத்தில் குசால்நகர் வட்டத்தில் உள்ள ஹாரங்கி அணையும் வேகமாக நிரம்புகிறது. ஹாரங்கி ஆறும் காவிரியில் கலக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, காவிரி நதிநீர் பிரச்சனைக்காக கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று ஆகஸ்ட் 2-ந் தேதி நடத்துகிறார்.
