நீதித்துறையின் இன்றைய போக்குகள் குறித்து நீதியரசர் சந்துரு (Justice Chandru) நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு விரிவான நேர்காணல் அளித்துள்ளார்.
மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் நீதியரசர் சந்துரு தெரிவித்த கருத்துகள்: நீதிபதிகள் தங்கள் மாணவப் பருவம் மற்றும் பின்னணியில் இருந்து பெறும் கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் முற்றிலுமாக ஒதுக்க முடியாது; அது அவர்களின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, நீதிபதிகள் தாங்கள் ஏற்புமொழி எடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மட்டுமே தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
நீதிபதிகளின் தீர்ப்புகள் தகுந்த காரணங்களோடும், மேல் நீதிமன்றங்களின் முன் உதாரணங்களோடும் இருக்க வேண்டும்; தன் விருப்பப்படி வரம்பு மீறிச் செயல்பட முடியாது.
ராஜஸ்தான் நீதிபதி ஒருவர் தூக்குத் தண்டனையை பொதுவெளியில் நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்ப்பளித்ததும், உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.
தற்போதைய கொலிஜியம் நியமன முறையில் சில காவி ஆர்வலர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் சார்ந்தவர்கள் உயர் நீதிமன்றங்களில் நுழைந்துள்ளனர்.
திராவிட இயக்கங்கள் மேடை நாடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களைப் பரப்பியதை எதிர்கொள்ள, 1954ஆம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்தபோது ‘நாடகத் தணிக்கைச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. திரைப்படங்களை விட நாடகங்கள் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், எம்.ஆர். ராதா தடை செய்யப்பட்ட நாடகங்களின் பெயர்களை மாற்றி நடித்து வழக்கு மற்றும் சிறை தண்டனைகளை எதிர்கொண்டார்.
பிற்காலத்தில் நான் நீதிபதியாக இருந்தபோது, பத்திரிகையாளர் ஞானி தொடர்ந்த வழக்கில், கருத்துச் சுதந்திரத்திற்குத் தடையாக இருந்த அந்த நாடகத் தடைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்து ரத்து செய்தேன்.
