தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் உள்ள வடகோவை ரயில் நிலையம், சுமார் 11.5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வசதிகளுடன் புதிய வடிவமைப்பில் ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடகோவை சந்திப்பு எனப் பல்வேறு இடங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், ரயில் நிலைய முகப்பில் இந்தியில் மட்டும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததால், அதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 2) மாலை இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, நேற்று நள்ளிரவில் இந்தி எழுத்துகள் மீது பெயிண்ட் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த ராவணன் என்பவர், ஒரு சிறிய பக்கெட்டில் பெயிண்ட் எடுத்து வந்து இந்தியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் மீது ஊற்றி அழிக்கும் வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரயில் நிலைய முகப்பில் வைக்கப்பட்டிருந்த இந்தி பெயர் பலகையை ரயில்வே நிர்வாகம் அகற்றியுள்ளது.
இது தொடர்பாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகோவை இரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்பலகை வைத்திருப்பதை கண்டித்து அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் 02/08/2026 இன்று மாலை 5 மணிக்கு இந்தி அழிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வடகோவை இரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தி பெயர்பலகையை அகற்றியுள்ளது. ஆகவே இந்தி அழிப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
