ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் எண்ணெய் தளங்களை இஸ்ரேல் தாக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஓராண்டாகப் போர் நடந்துகொண்டிருக்கிறது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் இஸ்ரேலின் தாக்குதலினால் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 96,000 அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ராணுவம் கடந்த 1ஆம் தேதி இஸ்ரேலின் தலைநகரம் டெல் அவீவ் மீது 153க்கும் அதிகமான பேலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இன்று(அக்டோபர் 3) அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 நபர்கள் இறந்துள்ளார்கள்.
இதுகுறித்து ஜி7 நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் தொலைப்பேசியில் நேற்று உரையாடினர்.
அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் “ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத் தக்கது. அதற்காக அமெரிக்கா ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்கும்.
ஆனால் ஈரான் நாட்டின் அணுசக்தி உள்ள இடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது. ஈரான் எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்தியதோ, அதற்கேற்றவாறு தான் தாக்குதல் நடத்த வேண்டும் “ என்றார்.
இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதலை ஐக்கிய நாடுகள் கண்டிக்காததால், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயாலாளர் அந்தோணியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதித்துள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த போர்ச் சூழலை தடுத்து நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சீன அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஜப்பான் நாடு லெபனானில் இருக்கும் தனது நாட்டு மக்களை மீட்க இரண்டு சி-2 விமானங்களை கிரீஸ் மற்றும் ஜோர்டான் நாட்டுக்கு அனுப்ப உள்ளது.
லெபனானில் உள்ள தனது நாட்டு மக்களை மீட்க ஆஸ்திரேலியா 500 விமான சீட்டுகளைப் பதிவுசெய்துள்ளது.
இதற்கிடையில் இந்த போர் சூழலுக்குக் காரணம் அமெரிக்கா மற்றும் சில மேற்குலக நாடுகள் தான் என்று ஈரான் நாட்டு அதிபர் அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்… முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன்!
லெபனான் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்… உயரும் பலி எண்ணிக்கை!