Charge sheet filed in Armstrong's murder case... Rowdy Nagendran is the first accused!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்… முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன்!

அரசியல்

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 பேர் மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 3) தாக்கல் செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.

கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை மறைந்த ரவுடிஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திமுக வழக்கறிஞர் அருள், அதிமுக நிர்வாகி மலர்கொடி, காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும், காதலியான பாஜக நிர்வாகியான அஞ்சலை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை பிரபல ரவுடி நாகேந்திரன்  என 28 பேரை கைது செய்தது காவல்துறை. அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் பாம் சரவணன், சம்போ செந்தில் என்ற சம்பவம் செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவர் ஆணையர் அருண், ’விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 30 பேர் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர காவல்துறை இன்று தாக்கல் செய்துள்ளது.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள 28 பேருடன், சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரின் பெயரையும் சேர்த்து 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் குற்றவாளியாக சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் பெயரும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள  ரவுடி சம்போ செந்தில் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 28 பேரில் 25 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

லெபனான் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்… உயரும் பலி எண்ணிக்கை!

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து : தெலங்கானா பெண் அமைச்சருக்கு குவியும் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *