டேன் டீ விவகாரம் தொடர்பாக கூடலூரில் நவம்பர் 20 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட ஆர்பாட்டம் நடந்தது.
இதில் டேன் டீ நிறுவன விவகாரம் தொடர்பாக மாநில திமுக அரசை கடுமையாக கண்டித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்பதை சூசகமாக அறிவித்தார்.
அண்ணாமலை பேசும்போது, “கூடலூர் அமைந்துள்ள நீலகிரி தொகுதியில் பலமுறை திமுகவுக்கு மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். செக்ஷன் 17 என்ற சட்டம் இன்னும் பிரச்சினையாகிக் கொண்டே இருக்கிறது.
காட்டுக்குள் உள்ள 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் கொடுக்க முடியாமல் இருக்கிறது. கடந்த 16 மாதங்களாக திமுக அரசு சப்பை காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் அடர் காடுகள் உள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களை விட வன விலங்கு- மனித மோதல் கூடலூரில்தான் அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது மக்கள் இப்படியே இருக்கட்டும் என்று திமுக அரசு நினைக்கிறது என்றே தோன்றுகிறது.
மக்களை இப்படியே வைத்திருந்தால்தான் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்று திமுக கருதுகிறது. இதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான்… நமது பிரதமர் அவர்கள் நமது மத்திய அமைச்சர் ஐயா முருகன் அவர்களுக்கு ஒரு பணியைக் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து மாதத்துக்கு ஐந்து நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டும். ஊட்டி மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
நானும் முருகன் ஐயாவும் மீட்டிங்கில் இருக்கும் போது பிரதமர் இதைச் சொன்னார். ஊட்டியில் நிறைய பொட்டன்ஷியல் இருக்கிறது.
சுற்றுலாவை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவேண்டும், இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று கருதுகிறார் பிரதமர்.
அதனால்தான் ஊட்டிக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறார் முருகன்” என்று முக்கியமான தகவலை வெளியிட்ட அண்ணாமலை, “இந்த தொகுதி எம்பி பிசாசை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவரை ஓட்ட வேண்டிய வேளை வந்துவிட்டது.
ஊழல் செய்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அவர் ஊட்டிக்கு என்ன ஆக்கபூர்வமான பணிகளை செய்திருக்கிறார்?”
என்று தற்போதைய நீலகிரி எம்பியான ராசாவை பற்றியும் கடுமையாகச் சாடினார்.
அண்ணாமலை பேசிய அதேநாளில் நீலகிரி எம்பி ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாவட்ட திமுக நிர்வாகிகளோடு ஆலோசனையும் நட்த்தினார்.

கடந்த சில மாதங்களாகவே மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் கூட்டம், பொது அமைப்புகளை சந்தித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்.
நேற்று அண்ணாமலை சொன்னதை வைத்துப் பார்க்கும்போது நீலகிரி மக்களவை தொகுதிக்கு எல்.முருகன் தான் பாஜக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
–ஆரா
Comments are closed.