மங்களூருவில் குண்டு வெடித்த ஆட்டோவில் பயணித்த சாரிக் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளபதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் கடந்த 19 ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆட்டோவில் இருந்து பல்வேறு வெடிகுண்டு உபகரணங்கள் பொருத்தப்பட்ட குக்கர் வெடித்த நிலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என கர்நாடகா டிஜிபி பிரவீன் சூத் அறிவித்தார்.
ஆட்டோவில் பயணித்தவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவரை அடையாளம் கண்டு கொள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்பு அவர் சிமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி பகுதியை சேர்ந்த சாரிக் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், சாரிக் குடும்ப உறுப்பினர்களை இன்று(நவம்பர் 21) காவல்துறையினர் மங்களூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துனர்.
குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த தகவலின் படி இது சாரிக்தான், வயது 25 என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சாரிக் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கர்நாடக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி அலோக் குமார் இன்று(நவம்பர் 21) தெரிவித்தார்.

“சாரிக் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மங்களூரு நகரில் லக்சர் ஈ தொய்பா ஆதரவு வாசகங்களை எழுதியதற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டவர்.
ஜாமீனில் வெளியே வந்த சாரிக் பல்வேறு தீவிரவாத கும்பலிடம் தொடர்பை ஏற்படுத்தி குண்டு வெடிப்பு ஒன்றை நடத்த தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி வந்துள்ளார்.
சிமோகா மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் 3 நபர்கள் வெடிகுண்டை தயாரித்து அதை கடந்த 16.8.2022 தேதி அன்று வெடிக்க வைத்து சோதனை செய்ததாக மாஸ் முனிர் மற்றும் செய்யத் யாசின் ஆகியோரை போலீஸ் கைது செய்தனர்.

அவர்களது வீட்டில் இருந்த பல்வேறு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் அவர்கள் தொடர்பில் இருந்த டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவற்றை கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சாரிக் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
நண்பர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் சிமோகா நகரில் இருந்து தப்பித்து போலியான ஆதார் அட்டையை பயன்படுத்தி கடந்த செப்டம்பர் மாதம் மைசூருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அங்கு மொபைல் போன் சர்வீஸ் செய்யும் தொழில்நுட்ப கல்வியை கற்பது போல தங்கியிருந்து கோயம்புத்தூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் பிறகு கடந்த வாரம் மைசூருவிலிருந்து மங்களூரு நகருக்கு பஸ் மார்க்கமாக வந்த சாரிக் குண்டு வைக்க பஸ் மூலமாகவே பயணித்து பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்துள்ளார்.
19 ஆம் தேதி திட்டமிட்டபடி வெடிகுண்டை எடுத்து செல்லும்போது ஆட்டோவில் குண்டு வெடித்துள்ளது” என்று அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலம் முழுவதும் 11 இடங்களில் சோதனை செய்தபோது மைசூருவில் சாரிக் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து வெடிகுண்டு செய்ய தேவையான உபகரணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான டைமர், எலக்ட்ரானிக் சர்க்யூட், பேட்டரி, ரசாயன பொடிகள், ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும்.
மேலும் அவரது மடிக்கணினியில் இருந்து குக்கர் பாம் செய்யப்பட்ட பிறகு அதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு சாரிக் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
கத்தாரில் நாமக்கல் முட்டைக்கு திடீர் தேவை… ஏன்?
அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு!
ராஜன் குறை! இதுக்கு முகமூடி போடாம ஒரு சிறப்பு கட்டுரை எழுதி தரனுமே! எவ்வளவு எதிர் பார்ப்பீங்க.?