திமுகவுடன் நம்பக தன்மையுடன் கூட்டணி.. ஜோதிமணி எம் பி குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு – கிரிஷ் சோடங்கர்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே உள்ள உட்கட்சி பூசல் குறித்து கரூர் எம்பி ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் நேற்று கரூர் எம்பி ஜோதி மணி, “தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது” என வெளிப்படையான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜனவரி 3) சென்னையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காங்கிரஸ் எம்பி. ஜோதிமணி எழுப்பியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜோதிமணியிடம் கருத்து கேட்டுள்ளோம். பிரச்சனைகள் குறித்து அவர் எங்களிடம் தெரிவித்திருக்கலாம்.

ADVERTISEMENT

ஜோதிமணி கூறிய புகார் தொடர்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ்குமார், செந்தில்குமார் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் கூட்டணி குறித்து பேசுகையில், ஒரு மாதத்திற்கு முன்பாகதான் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். திமுகவுடன் மட்டுமே கூட்டணி செல்ல முடிவெடுத்து பேச்சு நடத்த குழு அமைத்துள்ளோம். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. திமுகவுடன் நம்பக தன்மையுடன் கூட்டணி உள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை வாங்கியுள்ளோம்.

காங்கிரஸ் 38 தொகுதிகள் கேட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் 38 தொகுதிகளை கேட்டதாக கூறியது யார்? தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி செல்வதாக வெளிவரும் செய்தி என்பது வதந்தி. அதை நாங்கள் யாரும் சொல்லவில்லை. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேசி வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share