ADVERTISEMENT

கடுகடு டிரம்ப்.. டெல்லியில் கால் வைக்கும் புதின்- ’சென்னை திட்டம்’ குறித்து மோடியுடன் பேச்சு?

Published On:

| By Mathi

Putin India

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia Putin) நாளை டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இருநாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய மோடி, 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு புதின் வருகை தர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று புதின் நாளை இந்தியா வருகை தருகிறார்.

ADVERTISEMENT

புதின் நிகழ்ச்சிகள்

  • டிசம்பர் 4-ந் தேதி புதினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் விருந்து அளிக்கிறார்.
  • டிசம்பர் 5 அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இது என்பதால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தியா- ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பு

இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களில் 65% ரஷ்யாவிலிருந்து பெறப்படுகின்றன. எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் கூடுதல் கொள்முதல் மற்றும் அதிநவீன சுகோய்-57 போர் விமானங்கள் குறித்தும் புதின் வருகையின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் இறக்குமதி

எரிசக்தி துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த வர்த்தக உறவை சற்றே ”ஊசலாட்டத்துடன்” இந்தியா தொடருகிறது. இது தொடர்பாகவும் புதின் வருகையின் போது முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும்.

டிரம்ப்பின் கோபமும் வரி விதிப்பும்

உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்ததை அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். இதனை சுட்டிக்காட்டியே இந்தியாவுக்கு 25% ‘தண்டனை வரி’யை அறிவித்தார் டிரம்ப். உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் ஏற்படாமல் போனால் 100% வரி விதிப்பேன் எனவும் டிரம்ப் கொக்கரித்தார். அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் புதின் இந்திய வருகை, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

உக்ரைன் போர் நிறுத்தம்

மேலும் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதினுடன் பிரதமர் மோடி புடினுடன் பேசுவார் எனத் தெரிகிறது.

சென்னை – விளாடிவோஸ்டாக் கடல் வழித் தடம் (Chennai-Vladivostok Maritime Corridor)

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ரஷ்யா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கும், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கும் இடையேயான கடல்வழித்தடத்தை மேம்படுத்துவது குறித்து நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை – விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் நடைமுறைக்கு வரும் போது இரு நாடுகளிடையே புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும். தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு இத்திட்டம் பெரும் வாய்ப்பாக இருக்கும். தற்போதைய புதினின் இந்திய வருகையின் போது இத்திட்டம் குறித்தும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்பது எதிர்பார்ப்பு.

2019-ம் ஆண்டு ஜூலையில் இந்திய – ரஷ்ய கடல்சார் கூட்டு ஆணையத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற இந்திய-ரஷ்ய பொருளாதார பேச்சுவார்த்தையின்போது கிழக்கு கடல்சார் வழித்தடம் தொடர்பான கொள்கை உருவாக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அமைச்சகத்தின் மூலம், சென்னைத் துறைமுக ஆணையத்தின் வாயிலாக இந்தியா – ரஷ்யா இடையேயான, சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தட செயல்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும், சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கம் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share