சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவாகியுள்ள ‘இந்தியன் – 3’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து , 1996ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டதின் முதலே பல்வேறு சிக்கல்களை அப்படம் சந்தித்தது.
படப்பிடிப்பில் நடந்த விபத்து, அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்களின் மறைவு எனப் பல்வேறு தடங்கல்களைக் கடந்து அந்தத் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
தமிழ் சினிமாவில் ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் வெளியாகும் முதல் ஃபிரான்ச்சைஸாக ‘இந்தியன்’ஆனது. ரிலீஸுக்கு முன்பு வெளியான டீசர், டிரெய்லர் என எதுவும் ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ’பாரா’ என்கிற பாடல் மட்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சுமாரான வரவேற்பு
இந்த நிலையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்தது.
மேலும் முதல் பாதியிலிருந்த கிளாசிக் தன்மை, நம்பகத் தன்மை , சுவாரஸ்யம் என எதுவும் இல்லாத ஒரு கமர்சியல் திரைப்படமாக ‘இந்தியன் – 2’ திரைப்படம் உள்ளது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்தியன் 3
ஆனால், படத்தின் கிளைமாக்ஸில் காண்பிக்கப்பட்ட ‘இந்தியன் – 3’ படத்தின் டிரெய்லர் சற்று சுவாரஸ்யமாகவே தெரிந்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்தியன் – 3’ திரைப்படம் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்தது.
இந்தநிலையில், ‘இந்தியன் – 3’ திரைப்படத்தை நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட அப்படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவுக்கு ‘இந்தியன் – 2’ வுக்கு கிடைத்த சுமாரான வரவேற்பே காரணமாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் ‘இந்தியன் – 2’ வில் நடித்த சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி, சங்கர், பாபி சிம்ஹா, ஜெகன் ஆகியோருடன் சேர்த்து கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சங்கரைப் பொறுத்தவரை அவரது இயக்கத்தில் தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிக்கும் ‘கேம் சேஞ்சர்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது.
– ஷா
கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!
சென்னை மெட்ரோ 2: மத்திய அரசு 63,246 கோடி ஒதுக்கியதா? – தமிழக அரசு விளக்கம்!
Womens T20 World Cup : 16 தோல்விகளுக்கு பின் வங்கதேசம் வெற்றி!