கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!

Uncategorized

கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டாஸ் போடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா, புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரிய வழக்குகளை நீதிபதி பரத சக்ரவர்த்தி விசாரித்து வருகிறார்.

கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறார்.

“கூல் லிப்” உள்ளிட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவிப்பது தொடர்பான விவகாரத்தில் ஹரியானா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்களை நீதிமன்றம் எதிர்மனுதாரராக சேர்த்தது.

இவ்வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 4) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர்.

அவர்கள், “தமிழகத்தில் குட்கா, கூல் லிப் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அண்டை மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதையும் மீறி விற்பனை செய்த 20ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா பொருள் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்டை மாநில அரசுகளுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது” என்று வாதிட்டனர்.

மத்திய அரசு தரப்பில், “கூல் லிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வகை பொருட்கள் தயாரிப்பவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தற்போது கூல் லிப், குட்கா ஆகியவற்றை இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தைப் பயன்படுத்தி எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ அதையே இந்த விவகாரத்திலும் ஏன் எடுக்கக் கூடாது.

இப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடை செய்ய முடியும். எனவே இந்த நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப் பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை பிறப்பிக்கும்” என்று கூறி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Womens T20 World Cup : 16 தோல்விகளுக்கு பின் வங்கதேசம் வெற்றி!

விஜய்யின் ’கோட்’ மோதிரம்! – பரிசளித்தது இவரா?

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *