நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (NEET-UG) நீட் மறு நுழைவுத் தேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும் நாடு முழுவதும் கடும் புகார்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மே 3-ல் நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான், விடுபட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மறு நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன.
கூடுதல் நேரம் ஒதுக்கீடு:
இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிகப்பட்டனர். சரியாக மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியுள்ள இந்த நீட் தேர்வு மாலை 5:15 மணி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடத்தப்படும். ஆனால், இந்த முறை நிர்வாக நடைமுறைகள் மற்றும் சோதனைக் காரணங்களுக்காகக் கூடுதலாக 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு, தேர்வு நேரம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
22 லட்சம் மாணவர்கள்:
நாடு முழுவதும் மொத்தம் 5440-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 307 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் இந்த மறுதேர்வில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த முறை நடந்த முறைகேடுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதால், தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு, ஜாமர்கள் பொருத்துதல் மற்றும் தீவிர சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேசிய தேர்வு முகமை மேற்கொண்டுள்ளது.
