‘விடுதலையால் கிடைத்தது’ என்ற பெயரில் ட்விட்டர் பதிவு ஒன்றை இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டிருக்கும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், அதில், “அரசியல் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருசில குடும்பங்களே ஆண்டுகொண்டிருக்கின்றன” என குடும்ப அரசியலைக் குத்திக் காட்டியிருக்கிறார்.
2021ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் தேதி, தமிழக மின்சார வாரியத்தின் மின்கட்டண கணக்கீடு முறையை விமர்சித்து இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘’அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர்.
அதுவும் ஒரே ஒரு நாள்கூட தாமதமாகாமல். ஆனால், மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால் கடந்த மாதத்தில் (ஜூலை 2021) 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக செலுத்தியுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை.
அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச் சொன்னால் அதற்கான திறன் தமிழ்நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்” என அவர் வெளியிட்டிருந்த அறிக்கை அந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் வைரலானதுடன், புதிதாகப் பதவியேற்ற திமுக அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தங்கர் பச்சான் இன்று (ஆகஸ்ட் 15) பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “அப்பழுக்கற்ற, தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்குப் பாடுபடுவது என்ற எண்ணத்தோடு மட்டுமே ஒரு ரூபாய்கூடச் செலவழிக்க முடியாத ஒருவர்… இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? இது, என்னுடைய கேள்வி மட்டுமே அல்ல; வாக்குகளைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வோர் இந்திய வாக்காளனின் கேள்வி.
அரசியல் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கிவிடலாம்.
எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்த விடுதலை (சுதந்திரம்) நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டதுபோல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டுகொண்டிருக்கின்றன.
இதில் சுதந்திரம் எனச் சொல்லப்படுகிற விடுதலை எதைச் சாதித்துக் கொண்டிருக்கிறது” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பிடிஆர் கார் மீது செருப்புவீச்சு: முதல்வரின் கடிதத்துக்கு அண்ணாமலை பதில்!
