அரசு அலுவலகங்கள் என்றாலே ஊழியர்கள் தாமதமாக வருவார்கள், அங்கு அலட்சியமாக வேலை நடைபெறும் என்பது சாமானிய மக்களின் மனநிலையாக உள்ளது.
இதனை முறைப்படுத்த பிரதமர் மோடி பதவியேற்றதும் கடந்த 2014ஆம் ஆண்டு பல்வேறு அதிரடி விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி காலையில் உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும், மதியநேர உணவு இடைவேளை நேரத்தை அதிகமாக எடுக்கக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை முறைப்படுத்த பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்பட்டது. அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஆனால் கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை, காலைநேர வருகை என்பது மிகவும் தாமதமாக உள்ளது உள்ளிட்ட புகார்கள் மத்திய அரசுக்கு சென்றன.
இதனையடுத்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தாமதமாக அலுவலகம் வந்தால் அவர்களுக்கு அரைநாள் விடுப்பு கட்டாயம் ஆக்கப்படும் என்றும், தாமதமாக வருவது தெரிய வந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த சுற்றறிக்கையால் தாமதமாக அலுவலகம் வரும் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், சாமானிய மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் உட்பட மூவர் நீக்கம்!
AUSvsAFG : ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி… வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்!