”ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் உடன்பாடு இல்லை”: நீதிபதி சுப்பிரமணியன்

Published On:

| By christopher

“iam not agree with Retired Justice Chanduru report”: Justice Subramanian

பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 2) கருத்து தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி மாணவர் மீது சக பள்ளி மாணவர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்காக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்த பின்,  610 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூன் மாதம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்தார்.

அதில் சாதி மோதல்களை தடுக்க உடனடியாக செய்ய வேண்டியவை மற்றும் நீண்டகால செயல் திட்டங்கள் என மிக விரிவான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

எனினும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு  பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியும் இன்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி வெரோனிக்கா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கெளரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் டீன்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி சுப்பிரமணியம், “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பல மாதங்களாக டீன்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய, பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தீர்கள். அவர் அளித்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டீர்கள்.

பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல.

சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்” என நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ”தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை அரசியல் கட்சியினர் மட்டுமே ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நீதிபதி ஒருவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கோட் படத்துக்கு தளர்வு… காலை 7 மணிக்கு முதல் காட்சியா?

காலையில் படிப்பு… மாலை சமோசா விற்பனை… நீட்தேர்வில் 664 மார்க்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share