சமோசா விற்பனை செய்துகொண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள உத்தரபிரதேச மாணவரை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சன்னிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். படிக்கும்போதே வறுமையின் காரணமாக, மாலை நேரத்தில் சமோசா கடை வைத்து விற்பனை செய்து வந்தார். மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்ட சன்னிகுமார், நீட் தேர்வுக்கு தன்னை தயார் செய்து வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சமோசா விற்பனையில் ஈடுபடுவார். இதில், 500 முதல் 600 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.
பின்னர், இரவு முழுவதும் படித்துள்ளார். சரியாக உறங்காத நிலையில் கண்ணில் வலியும் ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கடுமையாக உழைத்த சன்னிகுமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டு பேசிய சன்னிகுமார், ”சமோசா விற்பனை எனது படிப்பை பாதிக்கவில்லை .மருத்துவம் படித்துக்கொண்டே சமோசா விற்பனை செய்வேன். எனது மாமா ஒருவர்தான் எனக்கு உதவி செய்தார். அவரும் திடீரென இறந்து விட்டார். மாமா இறந்து போனதும், முதலில் காய்கறி வியாபாரம் செய்தேன். அதில், போதிய லாபம் கிடைக்கவில்லை. 3 வருடங்களுக்கு முன்புதான் சமோசா விற்பனை தொடங்கினேன்” என்று கூறியுள்ளார்.
சன்னி குமாரின் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பிசிக்ஸ் வாலா என்ற நீட் தேர்வு பயிற்சி மைய தலைமை செயல் அதிகாரியான அலேக் பாண்டே, சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு சன்னி குமார் நல்ல உதாரணம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?
என் மகனை வைத்து கபில்தேவை பழி வாங்கி விட்டேன்: யுவராஜ்சிங் தந்தை ஆவேசம்!