ஜெம் வீரமணியின் மகளை சென்னை விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வு குழு தடுத்து நிறுத்தி உள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து டிஜிபி அமைத்த தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா சிங்கப்பூர் செல்ல மேற்கொண்ட முயற்சியை சிறப்பு புலனாய்வு குழு முறியடித்துள்ளது.
இன்று பிற்பகல் 2:20 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த இண்கோ விமானத்தில் ஏறி சிங்கப்பூர் செல்வதற்காக வீரமணியின் மகள் அர்ச்சனா அமர்ந்திருந்தார்.
குடிவரவு சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு சிங்கப்பூர் புறப்பட இருந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் எஸ்ஐடி குழு விமானத்திலிருந்து இறக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து தாமதமாக 2.32 மணிக்கு இண்டிகோ விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
விமான நிலையத்தில் வைத்தே அவரிடம் சில நொடிகள் விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து அர்ச்சனா கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பண பரிவர்த்தனைகளில் அர்ச்சனாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
