கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு செய்யும் கொடுமையா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

Published On:

| By Mathi

Madras High Court

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவின்கீழ் மனைவிக்கு செய்யப்படும் கொடுமையாகக் கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும், வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் மனைவி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து, கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமை), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கணவர் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை; மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் வகையில் கொடுமைப்படுத்தியதும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எஸ். சுந்தர் மோகன் விசாரித்தார்.

ADVERTISEMENT

அப்போது தற்கொலை செய்த பெண்ணின் சகோதரர் தரப்பில், ”கணவர் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியது தொடர்பாகத் தாமும் தனது தாயாரும் மற்ற சாட்சிகளும் அளித்த வாக்குமூலங்களை விசாரணை நீதிமன்றம் முறையாகக் கவனத்தில் கொள்ளவில்லை” என வாதிடப்பட்டது. இதை மறுத்து, ”வரதட்சணை கேட்டதாகவோ, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவோ அரசுத் தரப்பு போதுமான ஆதாரங்களை முன்வைக்கவில்லை” என்று கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

அப்போது, தற்கொலை செய்த பெண்ணின் சகோதரர் முதலில் தனது சகோதரியைக் காணவில்லை என்று அளித்த புகாரில், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். வரதட்சணைக் கொடுமை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களில்தான் வரதட்சணைக் கொடுமை குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் தெளிவான விவரங்கள் இல்லாமல் பொதுவாகக் கூறப்பட்டிருப்பதால், வரதட்சணைக் கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

வேறொரு பெண்ணுடன் தொடர்பு விவகாரம்

அத்துடன், ”கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது குறித்தும், மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும் சாட்சிகள் தெரிவித்திருந்தபோதும், அவற்றைப் புறக்கணித்து கணவரை விடுதலை செய்தது தவறான முடிவு” என்று மனைவியின் சகோதரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஆய்வு செய்த நீதிபதி எஸ். சுந்தர் மோகன், இந்த வழக்கில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது நிரூபிக்கப்படவில்லை என்ற கீழமை நீதிமன்றத்தின் முடிவை ஏற்கவில்லை என்றார்.

அதே நேரத்தில், “கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உறவு மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அளவிலான தன்மை கொண்டதாக இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவின்கீழ் குற்றத்தை நிரூபிக்க, வேறொரு பெண்ணுடன் உறவு இருந்தது என்பதைத் தாண்டியும் கூடுதல் ஆதாரங்களை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அவ்வாறு நிரூபிக்கப்படவில்லை (In this case also, the fact that the second respondent had an illicit relationship has been proved. On facts, this Court is of the view that it was not of such a nature as to drive the wife to commit suicide. It is well settled that in order to attract the offences under Section 498A of IPC, something more than mere illicit relationship has to be established by the prosecution, which is not so in this case)” என்று கூறி, கணவரை விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தும், தற்கொலை செய்த பெண்ணின் சகோதரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தும் நீதிபதி எஸ். சுந்தர் மோகன் உத்தரவிட்டார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share