சாத்தூர் அருகே பெய்த கனமழை காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மாணவியின் தாயும் காயமடைந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியில் செல்வம் – சோலையம்மாள் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் முத்துசெல்வி, 17 வயதான இவர், சின்னக்காமன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேட்டமலை பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வீட்டின் நடுப்பகுதிச் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி முத்துசெல்வி இடிபாடுகளில் சிக்கிப் பலத்த காயமடைந்தார். அவரது தாயார் சோலையம்மாளுக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆட்டோ மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி முத்துசெல்வி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
