சாத்தான்குளம் அருகே பயங்கரம்: வீடு புகுந்து தாய் வெட்டிக்கொலை.. கணவன், மகன் படுகாயம்.. மகள்கள் கடத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

சாத்தான் குளத்தில் வீடு புகுந்து தாயை வெட்டிக்கொன்று இரண்டு பெண் குழந்தைகளை கடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி ரெஜிலா. இந்தத் தம்பதியினருக்கு பிளஸ்ஸி, பிரின்ஸா பாப்பா, பிளஸெட் ராஜா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ADVERTISEMENT

இன்று அதிகாலை இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், குடும்பத்தினரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதற்கிடையே, முத்துக்கிருஷ்ணன் மற்றும் மேரி ரெஜிலாவின் மகள்கள் இருவரையும் காணவில்லை. இந்த கொடூர சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஞானபிரகாசம் என்பவருக்கு இருந்த முன்பகை காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

இந்த சம்பவத்தில் கடத்தி சென்ற இரண்டு பெண்குழந்தைகளையும் காவல்துறையினர் மீட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவல், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்றால் அதை காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும். இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு அந்தக் குடும்பத்திற்கும், ஞானபிரகாசம் என்பவருக்கும் இடையிலான முன்பகை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே முன்பகை இருக்கும்பட்சத்தில் அதனால் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமையாகும். அந்தக் கடமையை காவல்துறை செய்யவில்லை.

ADVERTISEMENT

ஒரே குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு, இருவரை அரிவாளால் வெட்டிய கும்பல், இரு பெண் குழந்தைகளையும் கடத்திச் சென்ற கும்பலிடமிருந்து குழந்தைகள் மீட்கப் பட்டிருக்கும் போதிலும், கொலையாளிகளை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை என்பது வருந்தத்தக்கது.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் ஓர் அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும். இரவில் உறங்கும் போது கூட ஒரு குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது. சாத்தான்குளம் முதலூரில் நடந்த கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு காரணமான கும்பலை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share