கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய இரு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
விருதுநகரில் அதிகபட்சமாக 16 செமீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக திருப்பூர் வெள்ளக்கோயில் பகுதியில் 1 செமீ மழை பெய்துள்ளது.
இந்தநிலையில், இரண்டு மாவட்டங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட்டும், மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 23) வெளியிட்ட அறிவிப்பில், ” 23-10-2026 – திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை – அக்டோபர் 24 – திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னயை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், ”மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும். இது அக்டோபர் 26-ஆம் தேதி காலைக்குள் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறக்கூடும்.
இதன் காரணமாக அக்டோபர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும், அக்டோபர் 28-ஆம் தேதி ஒடிசாவிலும் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த புயலுக்கு ஆர்னாப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
